தமிழக அரசியலில் தற்போது நிலவும் சூழல் குறித்துப் நம்பிக்கை ஊடகத்திடம் பேசிய பத்திரிகையாளர் சபீர், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே நடிகர் விஜய்யின் அரசியல் தாக்கத்தைக் குறைக்க தீவிரமாக முயன்று வருவதாகத் தெரிவித்தார். விஜய் பக்கம் எந்தக் கூட்டணியும் சென்றுவிடக் கூடாது என்பதில் இரு கட்சிகளும் உறுதியாக இருப்பதாகவும், ஒரு சதவீத வாக்கு வங்கி கொண்ட கட்சிகளைக் கூடத் தங்கள் பக்கம் இழுக்க அவர்கள் ஆர்வம் காட்டுவதே இதற்குச் சான்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தல் முற்றிலும் மாறுபட்ட தேர்தலாக அமையும். திமுக, அதிமுக என இரு துருவ தேர்தலாக இருக்காது. திமுக 23 கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய நிர்பந்தம் என்ன? பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி அமைக்க காரணம் என்ன? மூன்று மாதங்களுக்கு முன்னரே 190 தொகுதிகளுக்கு சென்று தேர்தல் பிரச்சாரம் செய்ய கட்டாயம் எதிர்கட்சிகளுக்கு ஏன் வந்தது? இதெற்கெல்லாம் காரணம் தற்பொழுது இருக்கும் அரசியலில் மூன்றாவதாக ஒரு மாற்று சக்தி உள்ளே வந்து தற்பொழுது இருக்கும் அரசியலை மாற்றி விடும் என்ற அச்சம் மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் நிலவும் சலசலப்புகள்
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டின் போது ஏற்பட்ட இழுபறிகள் குறித்துச் சுட்டிக்காட்டிய அவர், இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக போன்ற கட்சிகள் அதிருப்தியில் இருந்ததை நினைவூட்டினார். குறிப்பாக, "திருப்தி இல்லாவிட்டாலும் பொது நோக்கத்திற்காகத் தொகுதிகளை ஏற்கிறோம்" என்ற திருமாவளவனின் கூற்று மற்றும் வேல்முருகனின் விமர்சனங்கள் ஆகியவை திமுகவிற்கு ஒரு விதமான எதிர்மறைத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
திமுகவின் தப்பு கணக்கு
திமுக கூட்டணி என்பது கொள்கைக்கான கூட்டணி என பேசி வரும் திமுகவினர், கொள்கைக்காக நின்ற கூட்டணி கட்சிகளை அவமதித்து விட்டது. தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று செய்த யூகத்தில் திமுக தப்பு கணக்கு போட்டுவிட்டது. 0.43 சதவீத வாக்கு வைத்திருக்கும் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் கொடுத்திருக்கும் திமுக, 2 சதவீத வாக்கு வைத்திருக்கும் மக்கள் நீதி மையத்திற்கு ஏன் ஒரு தொகுதி கூட ஒதுக்கவில்லை. பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை காரணத்தினால் மட்டுமே அமைந்த கூட்டணிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை திமுக கொடுக்க தவறிவிட்டது. எல்லாம் சரியாக இருந்து இருந்தால் ஏன் காங்கிரஸ் இத்தனை பிரச்சனை செய்ய வேண்டும்? கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் இத்தனை முறை அறிவாலயம் வாசலுக்கு செல்ல வேண்டும்? திருப்தி இல்லை என்றாலும் பொது நோக்கத்துக்காக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று ஏன் விசிக சொல்ல வேண்டும்? என சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
மக்கள் மனநிலை
விஜய் இன்னும் முழுவீச்சில் களமிறங்காவிட்டாலும், பல்வேறு கருத்துக்கணிப்புகளில் அவருக்கு 15% முதல் 20% வரை ஆதரவு இருப்பதாகத் தெரிவது திராவிடக் கட்சிகளுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் சபீர் கூறினார். "யாராவது ஒரு புது ஆள் வரட்டுமே" என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருப்பதாகவும், "இதுவரை வாக்களித்தவர்கள் என்ன செய்துவிட்டார்கள்?" என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளதே விஜய்க்குச் சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
டிடிவி தினகரன் மற்றும் அதிமுகவின் திடீர் கூட்டணி மாற்றங்களுக்குப் பின்னால் விஜய்யின் தாக்கம் இருப்பதாக அவர் சந்தேகம் எழுப்பினார். விஜய் - அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடப்பதாகத் தெரிந்த உடனேயே, அமித்ஷா நேரடியாகச் சென்னை வந்து கூட்டணியை உறுதி செய்ததை அவர் உதாரணமாகக் காட்டினார். ஒட்டுமொத்தமாக, இந்தத் தேர்தல் ஒரு 'மாற்று' அரசியலை நோக்கிச் செல்லுமா அல்லது பழையபடி இருமுனைப் போட்டியாகவே இருக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும் என அவர் தனது பேட்டியை நிறைவு செய்தார்.
