தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் வேட்பாளர் தேர்வு, தொகுதிப் பங்கீடு மற்றும் அனல் பறக்கும் பிரச்சாரங்களால் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் எந்தக் கூட்டணியுமின்றி 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை ஏற்கனவே வெளியிட்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை இன்று அதிரடியாகத் தொடங்குகிறார்.
ஆறுபடை வீட்டில் தொடக்கம்
சீமான் தனது பிரச்சாரப் பயணத்தை அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் வழிபாடு செய்து முறைப்படி தொடங்குகிறார். இன்று திருத்தணியில் தனது முதல் பரப்புரையைத் தொடங்கும் அவர், அதனைத் தொடர்ந்து சோளிங்கர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார்.
ஐந்து நாள் பயணத் திட்டம்
மார்ச் 24: வேலூர், குடியாத்தம், ஆம்பூர், ஊத்தங்கரை மற்றும் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் சீமான் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
மார்ச் 25: கிருஷ்ணகிரி, சூலகிரி, பாலக்கோடு மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்யும் அவர், அன்று மாலை பென்னாகரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
மார்ச் 26: மேட்டூரில் தனது பயணத்தைத் தொடங்கும் சீமான், ஓமலூர், சேலம், வாழப்பாடி, ஆத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்.
மார்ச் 27: சங்கராபுரத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கி, திருக்கோவிலூர், திருவண்ணாமலை, சேத்துப்பட்டு மற்றும் வந்தவாசி ஆகிய பகுதிகளில் சூறாவளிப் பயணம் மேற்கொள்கிறார்.
மார்ச் 28: காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, திருவள்ளூர் மற்றும் ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இறுதி கட்டமாக முதற்கட்டப் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.
தமிழகம் முழுவதும் தனித்து நின்று களம் காணும் நாம் தமிழர் கட்சி, இந்த முதற்கட்டப் பிரச்சாரத்தின் மூலம் தனது தேர்தல் வெற்றிக்கான அடித்தளத்தை வலுவாக அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
