தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் வேட்பாளர் அறிவிப்புகளால் விறுவிறுப்படைந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா, 'அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்' (அஇபுதமமுக) என்ற புதிய கட்சியைத் தொடங்கி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கிறார். தமிழகத்தின் 234 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் இக்கூட்டணி போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 23 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையின்படி, கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் முன்னாள் அமைச்சர் எம். ஆனந்தன், திருத்தணியில் முன்னாள் அரசுத் தலைமை கொறடா பி.எம். நரசிம்மன், மதுரை மத்தியில் சக்கரவர்த்தி, சங்கரன்கோவிலில் (தனி) முன்னாள் எம்பி வசந்தி முருகேசன், திருமங்கலத்தில் ஜீவிதா நாச்சியார், திருப்பரங்குன்றத்தில் தன பாண்டியன், பரமக்குடியில் (தனி) அமிர்தா பாலுசாமி, மேலூரில் சோனியா காந்தி, மானாமதுரையில் (தனி) திலக்ராஜ், முதுகுளத்தூரில் ராம்குமார் பாண்டியன், ராஜபாளையத்தில் ஹரிஷ், நாங்குநேரியில் ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்பி வெள்ளத்துரை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மேலும், குளச்சலில் கிறையஸ்ட் மில்லர், சிவகங்கையில் பிரபு, திண்டுக்கலில் ராமு தேவர், சிவகாசியில் நேஷனல் கணேசன், மன்னார்குடியில் ராசு பிள்ளை, மயிலாடுதுறையில் சுதாகர், திட்டக்குடியில் (தனி) பழனிவேல், ஸ்ரீரங்கத்தில் விஜய், திருச்சி கிழக்கில் நந்தகுமார் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் புருஷோத்தமன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமின்றி கேரளச் சட்டமன்றத் தேர்தலிலும் அஇபுதமமுக களம் காண்கிறது. அங்கு தேவிகுளம் (தனி) தொகுதியில் செல்லதுரை தென்னந்தோப்புச் சின்னத்தில் போட்டியிடுவார் எனச் சசிகலா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
