பாஜகவில் இணைந்தபோது தனக்குத் தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று சரத்குமார் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். சென்னையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 17 ஆண்டுகளாக அரசியலில் இயங்கி வரும் தனக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படாதது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, திருச்சியில் நடைபெற்ற மாநாட்டு மேடையில் தனது புகைப்படம் கூட இடம்பெறாதது தன்னை நம்பி வந்த தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைக்காமல் தனித்தே இயக்கி இருக்கலாம் எனத் தனது ஆதரவாளர்கள் கருதுவதாகவும், ஒரு தலைவருக்கு உரியப் பொறுப்பு வழங்கப்படாமல் தேர்தல் களத்தில் எப்படிச் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தலைமையிடம் கோரிக்கை
தற்போது தான் அதிருப்தியில் இல்லை என்றும், தனது நியாயமான ஆதங்கத்தையே வெளிப்படுத்துவதாகவும் கூறிய சரத்குமார், இது தொடர்பாகத் தேசிய தலைமைக்கும் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் கடிதம் அனுப்ப உள்ளதாகத் தெரிவித்தார். பிரதமர் மோடி மீதுள்ள மதிப்பின் காரணமாகவே பாஜகவில் இணைந்ததாகக் குறிப்பிட்ட அவர், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தானோ அல்லது தனது மனைவி ராதிகாவோ போட்டியிடப் போவதில்லை என்றும், தங்களோடு பயணித்த திறமையானவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், அவரைத் ஒரு தலைவராகவே தான் மதிக்கவில்லை என்றும் சரத்குமார் அதிரடியாகக் கூறியுள்ளார்.
