திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற இண்டியா கூட்டணி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைக் கடுமையாகச் சாடிப் பேசினார். பழைய காலங்களில் ராணுவத்தைக் கொண்டு போர்கள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது பாஜக ராணுவம் இல்லாமலேயே ஒரு போரைத் தொடுத்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். குறிப்பாகத் தமிழ் மொழி, பண்பாடு மற்றும் தமிழர்களின் நீண்டகால வரலாற்றைச் சிதைக்க அவர்கள் முயற்சிப்பதாகவும், ஆனால் தமிழர்களின் எழுச்சிக்கு முன்னால் அது ஒருபோதும் சாத்தியப்படாது என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கச் சதி
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைத் தொகுதி மறுவரையறை நடவடிக்கையுடன் இணைப்பதன் மூலம், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைப்பதற்கான மறைமுகச் சதித்திட்டத்தை பாஜக தீட்டியதாக ராகுல் காந்தி குறிப்பிட்டார். டெல்லியில் அமர்ந்து கொண்டு தமிழ்நாட்டை ஆள நினைக்கும் பாஜகவின் போக்கைச் சுட்டிக்காட்டிய அவர், தென் மாநிலங்களின் குரலை நசுக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளை நாம் முறியடித்துள்ளோம் என்றார். அரசியலமைப்பை வலுவிழக்கச் செய்து, ஆயிரக்கணக்கான ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட தமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயலில் பாஜக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
தமிழகத்துடனான உணர்வுப்பூர்வமான பிணைப்பு
தமிழ் மண்ணிற்கு வந்திருப்பதை மட்டற்ற பெருமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, கடந்த சில ஆண்டுகளில் தமிழக மக்களுடன் தனக்கு மிக நெருக்கமான பிணைப்பு ஏற்பட்டுள்ளதாக நெகிழ்ச்சியுடன் பேசினார். தான் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் மீது பாஜக தாக்குதல் நடத்தும் போதெல்லாம் தன்னை ஒரு தமிழனாகவே உணர்வதாக அவர் கூறினார். தமிழகத்தின் மீதான அன்பு தன் இதயத்தில் தனி இடத்தைப் பிடித்துள்ள நிலையில், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளால் தமிழகத்தை ஒருபோதும் நெருங்க முடியாது என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
கொள்கை ரீதியிலான அரசியல் போர்
பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகளை நசுக்கப் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் எண்ணம் ஈடேறாது எனக் குறிப்பிட்ட அவர், இது வெறும் அரசியல் போர் மட்டுமல்ல, இது ஒரு கொள்கைப் போர் என்று விவரித்தார். திமுகவைப் போலவே நீண்ட பாரம்பரியம் கொண்ட அதிமுக தற்போது அழிந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைத் தமிழர்களே தீர்மானிக்க வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்றார். ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒருசில நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைக்கும் பாஜகவின் போக்கை எதிர்த்துத் தொடர்ச்சியாகப் போராடுவோம் என்றும் ராகுல் காந்தி தனது உரையில் குறிப்பிட்டார்.
