தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ள நிலையில், அவருக்குப் புதுவை காவல்துறை 11 கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. முதலில் ஏப்ரல் 5-ஆம் தேதி அனுமதி கோரப்பட்ட நிலையில், அதே நாளில் எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன் போன்ற முக்கியத் தலைவர்கள் வருகை தருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக விஜய்யின் பிரச்சாரம் ஏப்ரல் 4-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுவைக்கு வரும் விஜய், கொக்கு பார்க், வெங்கடசுப்பா ரெட்டி சிலை சதுக்கம், தவளக்குப்பம் சந்திப்பு மற்றும் வில்லியனூர் - கூடப்பாக்கம் சந்திப்பு ஆகிய நான்கு முக்கிய இடங்களில் மட்டும் தனது வாகனத்தில் இருந்தபடி உரையாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சார நிகழ்வு காலை 9:30 மணிக்குத் தொடங்கி மதியம் 1:30 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு இடத்திலும் 2,000 பேருக்கு மேல் கூடக்கூடாது என்றும், தமிழகத்தைச் சேர்ந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் இந்தப் பிரச்சாரத்தில் பங்கேற்கப் புதுச்சேரிக்குள் வரக்கூடாது என்றும் காவல்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு கருதி கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் குடிநீர் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளைத் தவெக நிர்வாகிகளே செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரச்சார வாகனத்தைப் பின்தொடரக் கூடாது மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் வாகனத்தின் மேல் ஏறிப் பேசக்கூடாது போன்ற நிபந்தனைகளை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் புதுவை காவல்துறை எச்சரித்துள்ளது.
