தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மேற்கொண்டு வரும் சூறாவளிப் பிரச்சாரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. விருத்தாசலத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், திமுக - தேமுதிக கூட்டணி குறித்து மிகவும் உருக்கமாகப் பேசினார். "இவ்வளவு காலம் ஏன் திமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்று இப்போது உண்மையாகவே வருத்தப்படுகிறேன். இத்தனை வருடங்களாக ஒரு தவறான கூட்டணியில் இருந்துவிட்டோமோ என்ற எண்ணம் எனக்குள் தோன்றுகிறது" என்று அவர் பகிர்ந்துகொண்டார்.
குடும்ப உறவு முதல் கூட்டணி வரை
தொடர்ந்து பேசிய பிரேமலதா, மறைந்த தலைவர்களான கலைஞர் கருணாநிதி மற்றும் 'கேப்டன்' விஜயகாந்த் ஆகிய இருவருமே மேலிருந்து ஆசீர்வாதம் அளிப்பதால்தான் இந்தத் தலைமுறை கூட்டணி சாத்தியமாகி இருப்பதாகத் தெரிவித்தார். "இது வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல, ஒரு குடும்ப உறவு இப்போது அரசியல் உறவாக மாறியுள்ளது. கலைஞர் அவர்களைச் சந்திக்க அனுமதி கேட்டால் உடனடியாகக் கிடைக்கும்; கோரிக்கைகளை முன்வைத்தால் அடுத்த நாள் அதிகாலை 6 மணிக்கே தொலைபேசியில் அழைத்து பேசுவார். அவர் கேப்டனை எப்போதும் 'விஜி' என்றுதான் அன்போடு அழைப்பார்" என இருவருக்குமான ஆழமான நட்பை நினைவுகூர்ந்து நெகிழ்ந்தார்.
அரசியல் பதிலடி
திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 சட்டப்பேரவைத் தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா இடமும் வழங்கப்பட்டது குறித்து எழுந்த விமர்சனங்களுக்குப் பிரேமலதாவின் இந்தப் பிரச்சாரம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. திமுக வேட்பாளர்களுக்காக அவர் காட்டி வரும் ஆர்வம் அக்கட்சியினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே சமயம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து வரும் பிரேமலதா, ஏற்கனவே ராஜ்ய சபா சீட் தருவதாகக் கூறி இபிஎஸ் அளித்த ஒப்பந்த நகலைச் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. திமுக 7-வது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
