பொதுக்கூட்டத்தில் பேசிய பிரகாஷ் ராஜ், தான் ஒரு நடிகராக இங்கு வரவில்லை என்றும், நடிப்பது தனது தொழில் மட்டுமே என்றும் குறிப்பிட்டார். தன்னை வாழ வைத்த மக்களுக்கு ஏதேனும் ஒரு சிக்கல் வரும்போது ஓடி வருவது ஒரு கலைஞனின் தார்மீகக் கடமை என்பதால், ஒரு வாக்காளனாகத் தனது கருத்துகளைப் பதிய வைக்க வந்திருப்பதாகத் தெரிவித்தார். தற்போதைய தேர்தலை மூன்று வகைகளாகப் பிரித்த அவர், கல்வி மற்றும் மொழியைப் பாதுகாக்கும் 'திராவிட மாடல்', தன்மானத்தை அடகு வைக்கும் 'அடிமை மாடல்', ஒரே நாளில் அதிகாரத்திற்கு வரத் துடிக்கும் 'சினிமா மாடல்' ஆகியவற்றுக்கு இடையிலான போட்டியே இது என்று விளக்கினார்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் மீதான தாக்குதல்
மத்திய - மாநில அரசுகளைக் கடுமையாக விமர்சித்த அவர், பாஜக முன்மொழியும் ‘டபுள் இன்ஜின்’ அரசு என்பது உண்மையில் ஒரு ‘டப்பா சர்க்கார்’ என்று சாடினார். பதவி சுகத்திற்காக அதிமுகவினர் பாஜக எனும் விஷப்பாம்பைத் தமிழ்நாட்டிற்குள் அனுமதிப்பதாகவும், அந்தப் பாம்பு இறுதியில் அதைத் தூக்கி வந்தவர்களையே அழித்துவிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
சினிமா அரசியல் குறித்த கேள்வி
திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வருபவர்களைக் குறித்துப் பேசிய அவர், சினிமாவில் ஒரே நாளில் முதல்வராவது எளிது, ஆனால் எதார்த்த அரசியலில் அது நடக்காது என்றார். தமிழ்நாட்டின் மொழி மற்றும் இனப் போராட்டங்களின் போது இவர்கள் எங்கே இருந்தார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், மக்கள் காட்டும் அன்பைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தினார். ஒரு நடிகரைக் கண்டு விசில் அடிக்கலாமே தவிர, நாட்டின் எதிர்காலத்தை அவர்கள் கையில் ஒப்படைப்பது முறையல்ல எனத் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை குறித்த எச்சரிக்கை
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை குறித்துப் பேசிய பிரகாஷ் ராஜ், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டால் தென்னிந்தியா அரசியல் ரீதியாகப் புறக்கணிக்கப்படும் என்று கவலை தெரிவித்தார். பேரறிஞர் அண்ணாவின் மேற்கோளைச் சுட்டிக்காட்டிய அவர், அழகுக்காகவே மயில் தேசியப் பறவையாக்கப்பட்டது என்றும், எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொண்டால் காகத்தையே தேர்வு செய்திருக்க வேண்டியிருக்கும் என்றும் கூறி, தென்னிந்தியாவின் உரிமைகளை வலியுறுத்தினார்.
