தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, தான் போட்டியிடும் 18 தொகுதிகளுக்கான முழுமையான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, தருமபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி களம் காண்கிறார். தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் ம. திலகபாமா பாமக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல், விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார் கோவில் (தனி) தொகுதியில் மருத்துவர் அன்பு. சோழன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், விருத்தாசலத்தில் மருத்துவர் தமிழரசி ஆதிமூலம், சேலம் மேற்கில் மு. கார்த்தி, பென்னாகரத்தில் பாடி வெ. செல்வம், போளூரில் சி.ஆர். பாஸ்கரன் மற்றும் திருப்போரூரில் வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தொடர்ந்து ஜெயங்கொண்டத்தில் க. வைத்தி, சேலம் வடக்கில் எஸ். சதாசிவம், விக்கிரவாண்டியில் சி. சிவக்குமார், சோளிங்கரில் க. சரவணன், மயிலாடுதுறையில் சித்தமல்லி ஏ. பழனிச்சாமி, உத்திரமேரூரில் பெ. மகேஷ்குமார் மற்றும் ரிஷிவந்தியத்தில் அ.ப. செழியன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கீழ்வேளூரில் ச. வடிவேல் இராவணன், அம்பத்தூரில் கே.என். சேகர் மற்றும் செஞ்சியில் அ. கணேஷ் குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 18 தொகுதிகளுக்குமான பட்டியல் முழுமையடைந்துள்ளது. ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் அங்கமாகப் பாமக தனது பலத்தை நிரூபிக்கத் தயாராகி வருகிறது.
