தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 17-வது சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் 12 மாற்று அடையாள ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, வங்கி மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகம் உள்ளிட்ட அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை அடையாளமாக காட்டி வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாக்குரிமையை பயன்படுத்த அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்காளர்கள் எண்ணிக்கை
இந்தத் தேர்தலில் மொத்தம் 5 கோடியே 73 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 2 கோடியே 93 லட்சம் பெண்களும், 2 கோடியே 80 லட்சம் ஆண்களும், 7,728 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர்.
வேட்பாளர்கள் விவரம்
தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 3,579 ஆண்கள், 443 பெண்கள் மற்றும் 1 மூன்றாம் பாலினத்தை சேர்ந்த வேட்பாளர் உள்ளார்.
தேர்தல் ஏற்பாடுகள்
வாக்குப்பதிவு சீராக நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் வாக்குச்சாவடிகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும், மாற்று ஆவணங்களின் மூலம் வாக்களிக்கலாம் என்ற அறிவிப்பு, அதிகபட்ச வாக்கு பதிவு பெற உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து தகுதியான வாக்காளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
