தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதைத் தடுக்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும், அவை வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை என்றும் பாஜக தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் எந்தவொரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மையை வழங்காத நிலையில், ஆளுநர் தனது கடமையைச் சட்டத்தின்படி மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு பாஜகவை விமர்சிப்பது மலிவான அரசியல் செயல்பாடு என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்புச் சட்ட கடமைகள்
ஆளுநரின் அதிகாரம் குறித்து விளக்கிய நாராயணன் திருப்பதி, அரசியலமைப்புச் சட்டம் 164-ன் கீழ், ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவிக்கும் கட்சிக்குத் தேவையான ஆதரவு இருக்கிறதா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு ஆளுநருக்கு உள்ளதாகக் கூறினார். தேர்தலுக்கு முந்தைய கூட்டணி வெற்றி பெற்றிருந்தால் அதன்படி செயல்படலாம் அல்லது அதிக இடங்களைப் பெற்ற கட்சியை அழைக்கலாம். தற்போது காங்கிரஸ் தனது 5 உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே கடிதம் மூலம் வழங்கியுள்ளது. இந்தச் சூழலில், ஆதரவு அளிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை திருப்திகரமாக இருப்பதை உறுதி செய்த பின்னரே ஆளுநர் அடுத்தகட்ட முடிவை எடுக்க முடியும் என்பதை அவர் எடுத்துரைத்தார்.
எதிர்க்கட்சிகளின் இரட்டை வேடம்
கடந்த ஐந்து கால திமுக ஆட்சியில் நிகழ்ந்த சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், போதைப்பொருள் புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் போது கைகட்டி வேடிக்கை பார்த்த கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸும், திருமாவளவனும் இப்போது நீலிக்கண்ணீர் வடிப்பததாக நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தமிழகம் சீரழிந்து போனதற்குப் பொறுப்பேற்க வேண்டிய இவர்கள், இப்போது மக்கள் தீர்ப்பைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது. நேற்று வரை விஜய்யை பாஜகவின் 'பி' டீம் என்று விமர்சித்த திருமாவளவன், இன்று அதிகாரத்தில் பங்கு கிடைக்கும் என்ற கனவில் செயல்படுவது வெட்கக்கேடானது என்று அவர் சாடினார்.
ஜனநாயக மாண்பு காக்கப்பட வேண்டும்
தமிழகத்தில் அமையவிருக்கும் அரசு அரசியலமைப்புச் சட்டத்தின் படியே அமைய வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குதிரைப் பேரங்கள் மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்றும் அவர் கூறினார். சட்டத்தின் நெறிமுறைகளை உருவாக்கி வைத்திருப்பதன் நோக்கமே இத்தகைய சூழல்களைக் கையாள்வதற்குத்தான் என்பதால், ஆளுநர் எடுக்கும் சட்டப்பூர்வமான முடிவுகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் நாராயணன் திருப்பதி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
