சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (மார்ச் 19) நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். எதிர்வரும் தேர்தலுக்கான பல்வேறு அதிரடி மாற்றங்கள் மற்றும் தொலைநோக்குத் திட்டங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
நிர்வாக மாற்றமும் 5 தலைநகரங்களும்
தமிழகத்தின் நிர்வாகத்தைச் சீரமைக்க 5 வெவ்வேறு தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்று சீமான் அறிவித்துள்ளார். அதன்படி, திருச்சி நிர்வாகத் தலைநகராகவும், சென்னை தொழில்நுட்பத் தலைநகராகவும், கோயம்புத்தூர் தொழில் மற்றும் வணிகத் தலைநகராகவும் மாற்றப்படும். அதேபோல் மதுரை கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகராகவும், கன்னியாகுமரி தமிழர் மெய்யியல் தலைநகராகவும் திகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பனைமரம் தமிழ் தேசிய மரமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்தம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வர நாம் தமிழர் கட்சி திட்டமிட்டுள்ளது. நாட்டில் குடியரசுத் தலைவரை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும். சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் என்றும், பெண்களுக்கு எனத் தனித் தொகுதிகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்படும்; வாக்களித்த சான்று இருந்தால் மட்டுமே அரசின் சலுகைகள் கிடைக்கும் என்ற நடைமுறை கொண்டு வரப்படும்.
அரசுப் பணி மற்றும் நீர் மேலாண்மை
தன்னலமற்ற ஒரு சர்வாதிகார ஆட்சி முறையை அமைக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள சீமான், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார். உயிர் தேவையான குடிநீரை விற்பனைப் பொருளாக மாற்றத் தடை விதிக்கப்படும் என்றும், கடலில் வீணாகக் கலக்கும் 2,300 டி.எம்.சி மழைநீரைச் சேமிக்க முறையான திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
