தமிழக அரசியல் சூழலில் காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைக்க முடிவெடுத்துள்ள நிலையில், இது குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். தமிழகத்தின் நலன் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக தவெகவிற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் கூட்டணிகள் உருவாவதும் பிரிவதும் இயல்பான ஒன்றுதான் எனத் தெரிவித்த அவர், கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சற்று முன்பாக திமுக தங்களை கூட்டணியில் இருந்து வெளியேற்றியதை நினைவுகூர்ந்தார். அப்போது தாங்கள் திமுகவை விமர்சிக்கவில்லை என்றும், அதனை ஒரு அரசியல் முடிவாகவே பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது காங்கிரஸ் கட்சி ஒரு முக்கியமான அரசியல் நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், எனவே இரு கட்சிகளும் பரஸ்பர மரியாதையோடு பிரிவதே சிறந்தது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலினே தோல்வியைச் சந்தித்திருக்கும் இந்தச் சூழலில், திமுக குறித்துக் காட்டமான விமர்சனங்களை முன்வைப்பது அரசியல் நாகரிகம் அல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ராகுல் காந்தியின் ஆளுமை குறித்துப் பேசிய அவர், பாஜகவின் பாசிச ஆட்சியை வீழ்த்தும் வல்லமை படைத்த ஒரே தலைவர் அவர்தான் என்றும், அவருக்கு யாரிடமிருந்தும் நற்சான்றிதழ் தேவையில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ராகுல் காந்தியை அவதூறு செய்பவர்களைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என எச்சரித்துள்ள ஜோதிமணி, புதிய புரிதலுடன் தமிழகத்தின் எதிர்காலத்திற்காகத் தொடர்ந்து பயணிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
