தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய ஒரு முடிவாக, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தோல்வியைத் தழுவினார். 2011 முதல் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்திருந்த அவர், முதல்வராக இருந்தபோதே இம்முறை தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் வெற்றியைப் பறிகொடுத்துள்ளார். இந்நிலையில், தோல்வியையும் பொருட்படுத்தாமல் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மு.க.ஸ்டாலின் இன்று மாலை கொளத்தூர் தொகுதியில் நேரடிப் பயணம் மேற்கொண்டார்.
வாக்கு வித்தியாசமும் தேர்தல் முடிவும்
இந்தத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் களமிறங்கிய தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ்.பாபு 82,997 வாக்குகள் பெற்று அசத்தலான வெற்றியைப் பதிவு செய்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் 74,202 வாக்குகளை மட்டுமே பெற்று, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இவர்களைத் தவிர அதிமுக வேட்பாளர் சந்தான கிருஷ்ணன் 18,430 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சவுந்தர பாண்டியன் 5,046 வாக்குகளையும் பெற்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறகு, பதவியில் இருக்கும்போதே தோல்வியடைந்த முதல்வராக ஸ்டாலின் மாறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
தொண்டர்களின் அழுகையும் உருக்கமான சூழலும்
கொளத்தூரில் வாகனப் பேரணியாகச் சென்ற ஸ்டாலினைக் கண்ட திமுக தொண்டர்கள், கட்சியின் திட்டங்களை நினைவு கூர்ந்து கண்ணீர் விட்டு அழுதனர். குறிப்பாக, அவருடன் சென்ற முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு உணர்ச்சிவசப்பட்டு தேம்பி அழுதது அங்கிருந்தவர்களைக் கலங்கச் செய்தது. தொண்டர்களின் வருத்தத்தைக் கண்ட ஸ்டாலின், அவர்களை ஆசுவாசப்படுத்தி அழ வேண்டாம் என்று தேற்றினார். 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக ஆட்சியைக் கைப்பற்றவுள்ள நிலையில், தனது சொந்தத் தொகுதியிலேயே ஸ்டாலின் தோற்றிருப்பது திமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
