புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம், ஆலங்குடி, விராலிமலை, அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 1,683 வாக்குச்சாவடிகளில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 13.09 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், முக்கிய அரசியல் பிரமுகர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். திருமயம் தொகுதியின் திமுக வேட்பாளரும் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான எஸ்.ரகுபதி, புதுக்கோட்டை கிழக்கு 3-ம் வீதியில் உள்ள ராணியார் அரசு உயர்நிலைப் பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். இதேபோல், ஆலங்குடி திமுக வேட்பாளர் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தனது சொந்த ஊரான மறமடக்கியிலும், விராலிமலை அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இலுப்பூரிலும் வாக்களித்தனர்.
தேர்தல் ஆணையம் மீதான புகார் மற்றும் விஜய் குறித்த விமர்சனம்
வாக்களித்த பின் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அமைச்சர் எஸ்.ரகுபதி, இந்தியத் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாகச் செயல்படாமல் ஒரு குறிப்பிட்ட கட்சியுடன் கூட்டணி அமைத்துச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். எத்தனை முனைப் போட்டிகள் இருந்தாலும் களம் திமுக கூட்டணிக்குச் சாதகமாகவே உள்ளதாகத் தெரிவித்த அவர், இரட்டைப் பதிவுகள் மற்றும் இடம் பெயர்ந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் நீடிப்பதால் வாக்குப்பதிவு சதவீதம் சற்று குறைய வாய்ப்பிருப்பினும், கடந்த முறையை விடக் கூடுதல் வாக்குகள் பதிவாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இளம் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் திமுகவின் திட்டங்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு, அவர் நடிகர் எம்.ஜி.ஆரில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் என்று பதிலளித்தார். இரண்டு மணி நேரம் கூட வெயிலில் நிற்க முடியாத சுகவாசிகளை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றும், அவரால் மக்களுக்குப் பணியாற்ற முடியாது என்றும் சாடினார். மேலும், எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே தனது செல்வாக்கை இழந்துவிட்டதால் இந்தத் தேர்தலிலும் தோல்வியையே தழுவுவார் என அவர் குறிப்பிட்டார்.
