தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் இன்று நடத்திய நூதனப் பிரசாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 30-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்த அவர், இன்று கல்லக்குடி ரயில் நிலையப் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாகத் திடீரென ரயில் தண்டவாளத்தில் இறங்கி தலைவைத்து படுத்ததால் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாகப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவரிடம் இது குறித்து விளக்கம் கேட்டபோது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாகவே தான் இவ்வாறு செய்ததாகத் தெரிவித்தார். கடந்த 1953-ஆம் ஆண்டு கல்லக்குடி ரயில் நிலையப் பெயர் மாற்றத்திற்கு எதிராகக் கலைஞர் கருணாநிதி தண்டவாளத்தில் தலைவைத்து நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை நினைவுகூரும் வகையிலேயே தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக மன்சூர் அலிகான் விளக்கமளித்தார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளிடமும் சீட் கேட்டதாகவும், அது கிடைக்காததால் சுயேச்சையாகக் களம் இறங்கியுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், 1994 முதல் தொடர்ச்சியாகத் தேர்தலில் போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தண்டவாளத்தில் படுத்து மன்சூர் அலிகான் செய்த இந்தச் செயலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும், பலத்த பரபரப்பும் நிலவியது.
