அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போரினால் கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது. அதனால் ஏற்பட்ட சிலிண்டர் பற்றாக்குறையால், வணிக தேவையை விட பொதுமக்களின் வீட்டு தேவைக்கு முக்கியத்துவம் அளித்து சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையிலும் சிலிண்டர் காத்திருந்து பெறும் வண்ணமே உள்ளது.
இந்த சூழலில் சிலிண்டர் டெலிவரி செய்வதற்கான முதல் ஏடிஎம் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. டெல்லி அருகே உள்ள குருக் கிராமம் என்ற பகுதியில் முதல் எல்பிஜி ஏடிஎம் முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இயந்திரத்தின் உதவியால் 2 அல்லது 3 நிமிடத்தில் புதிய சிலிண்டரை நாம் நம்முடைய காலி சிலிண்டரை கொடுத்து மீண்டும் நிரப்பப்பட்ட சிலிண்டராக பெற முடியும். குறிப்பாக இந்த புதிய இயந்திரத்தின் மூலம் 24 மணி நேரமும் நம் சிலிண்டரை பெற்றுக் கொள்ள முடியும். இந்த இயந்திரம் நடைமுறைக்கு எல்லா இடங்களிலும் வரும் பட்சத்தில், சமையல் கேஸ் தீரும் போது நாட்கணக்கில் காத்திருக்க அவசியமில்லை.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ள இந்த எல்பிஜி ஏடிஎம் இயந்திரம் முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கக்கூடியது.
இந்த முறையில் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணை கொடுத்து
அதில் வரும் OTP ஐ அளித்து கியூ ஆர் கார்டை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தியதும் நிரப்பப்பட்ட சிலிண்டர் இயந்திரத்திலிருந்து எடுக்கப்பட்டு காலி சிலிண்டர் உள்ளே வைக்கப்படுகிறது. மேலும் இந்த ஏடிஎம் மிஷினிலிருந்து வழங்கப்படும் சிலிண்டர்கள் ஃபைபரால் செய்யப்பட்டவை மேலும் கிட்டத்தட்ட 15 கிலோ எடை மட்டுமே கொண்டுள்ளது. மேலும் ஒரேநேரத்தில் 10 சிலிண்டர் வரை அது தன்னகத்தே வைத்து கொள்ளும், சிலிண்டர் தீரும் நிலையில் அதுவே கேஸ் நிறுவனத்திற்கு எச்சரிக்கை அறிவிப்பை அளிக்கும். எரிவாயு சிலிண்டர் துறையில் இந்த நவீன முறை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
