மொத்தம் 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடையவுள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.
கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், மாநிலம் முழுவதும் தேர்தல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் மாவட்டம் தோறும் பயணம் செய்து, வீதி வீதியாகவும், வீடு வீடாகவும் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். வெற்றி பெற்றால் செயல்படுத்தப்படும் திட்டங்களை விளக்கியும், மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
மு . க . ஸ்டாலின்
திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை எழும்பூர், திருவிகா நகர், துறைமுகம் மற்றும் ராயபுரம் தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தேவையற்ற நிகழ்ச்சிகளை தவிர்த்து நேரத்தை பயனுள்ளதாக பயன்படுத்த கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி , சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் இன்று மாலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். பாமக தலைவர் அன்புமணி ராமடோஸ் உடன் இணைந்து அவர் வாக்கு சேகரிக்க உள்ளார். தாம் செய்த வளர்ச்சி திட்டங்களை எடுத்துரைத்து, இரட்டை இலைச் சின்னத்திற்கு ஆதரவு கோருகிறார்.
ராகுல் காந்தி
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று மீண்டும் தமிழகம் வருகிறார். குளச்சல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
சந்திரபாபு நாயுடு
தேசிய ஜனநாயக கூட்டணிக்காக ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோவை மற்றும் சென்னை நகரங்களில் இன்று பிரச்சாரம் நடத்துகிறார். தொடர்ந்து நாளை மதுரையிலும் அவர் பிரச்சாரம் மேற்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரவிந்த் கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை வந்துள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர், “தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றால், தற்போதைய அரசின் பல நலத்திட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது” என எச்சரித்தார்.
விஜய்
நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். பொன்னேரி தொகுதியில் தொடங்கி, வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன பேரணியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்.
இவ்வாறு, தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் முன் இறுதி கட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வேகத்தில் செயல்பட்டு வருகின்றன. நாளை மாலை 6 மணிக்குப் பிறகு பிரச்சாரம் நிறுத்தப்பட்டு, வாக்காளர்கள் தங்கள் தீர்மானத்தை எடுக்கத் தயாராகும் சூழல் உருவாகியுள்ளது. தமிழக அரசியல் களம் யாருக்கு சாதகமாக மாறும் என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
