கொளத்தூரில் ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ். பாபு: திமுக முன்னாள் மாசெ முதல் தவெக வெற்றி நாயகன் வரை - ஒரு பார்வை!

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ். பாபு, தனது வெற்றியைத் தலைவர் விஜய்க்குக் சமர்ப்பித்துள்ளார்.

M

எழுதியவர்

2 மணி நேரத்திற்கு முன்
கொளத்தூரில் ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ். பாபு: திமுக முன்னாள் மாசெ முதல் தவெக வெற்றி நாயகன் வரை - ஒரு பார்வை!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த 'ஸ்டார்' தொகுதியான கொளத்தூரில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ். பாபு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இத்தேர்தலில் வி.எஸ். பாபு 82,997 வாக்குகள் பெற்று முதலிடம் பிடிக்க, 74,202 வாக்குகளுடன் முதல்வர் ஸ்டாலின் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 18,430 வாக்குகள் பெற்ற அதிமுக வேட்பாளர் பி. சந்தன கிருஷ்ணன் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். 2011-ஆம் ஆண்டு இத்தொகுதி உருவாக்கப்பட்டதில் இருந்து தொடர்ச்சியாக மூன்று முறை எம்எல்ஏ-வாக இருந்த ஸ்டாலின், கடந்த தேர்தலில் 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்வரானார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 2026 தேர்தலில் முதல்முறையாகத் தனது கோட்டையிலேயே அவர் தோல்வியைத் தழுவியுள்ளார்.

அரசியல் பயணம் மற்றும் அதிரடி திருப்பங்கள்

ஒரு காலத்தில் வடசென்னை திமுகவின் அசுர சக்தியாகவும், மாவட்டச் செயலாளராகவும் விளங்கிய வி.எஸ். பாபு, 2006-ல் புரசைவாக்கம் தொகுதி எம்எல்ஏ-வாகப் பணியாற்றினார். 2011-ல் கொளத்தூர் தொகுதி உருவானபோது ஸ்டாலினுக்காகத் தனது வாய்ப்பை விட்டுக்கொடுத்து, அவரது வெற்றிக்காகக் களப்பணியாற்றினார். இருப்பினும், பி.கே. சேகர்பாபுவின் வருகைக்குப் பிறகு கட்சியில் முக்கியத்துவம் குறைந்ததால் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவிலும் நெருக்கடிகளைச் சந்தித்த அவர், 2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தாலும், உரிய அங்கீகாரம் கிடைக்காத அதிருப்தியில் இருந்தவர், சில மாதங்களுக்கு முன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

வெற்றிக்குப் பின் வி.எஸ். பாபு நெகிழ்ச்சி

அரசியல் விமர்சகர்கள் வி.எஸ். பாபுவின் இந்த வெற்றியை ஒரு சுவாரசியமான முரணாகப் பார்க்கின்றனர். முன்னொரு காலத்தில் யாருடைய வெற்றிக்காகக் கொளத்தூரில் உழைத்தாரோ, அதே மு.க. ஸ்டாலினையே தற்போது வீழ்த்தி வி.எஸ். பாபு சாதனை படைத்துள்ளார். தனது வெற்றி குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தோல்வியோ வெற்றியோ தற்போதைக்கு இரண்டாம் பட்சம் என்றும், "எல்லாப் புகழும் விஜய்க்கே; இது எனது வெற்றியல்ல, விஜய்யின் வெற்றி" என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தலைவர் காட்டும் வழியில் ஒரு சாதாரணத் தொண்டனாகப் பயணிக்கப்போவதாகக் குறிப்பிட்ட அவர், கொளத்தூரில் தான் பெற்ற இந்த வரலாற்று வெற்றிக்கு முழுமுதற் காரணம் விஜய் மட்டுமே என்று புகழாரம் சூட்டினார்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...