கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் புதிய சட்டப்பேரவையைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 9) நடைபெற உள்ளது. இதற்கான பகிரங்கத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது வாக்குப்பதிவிற்கான இறுதிக்கட்டப் பணிகளில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 140 தொகுதிகளைக் கொண்ட கேரளா, 126 தொகுதிகளைக் கொண்ட அசாம் மற்றும் 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி ஆகிய இடங்களில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு
புதுச்சேரியில் உள்ள 918 வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு அமைதியான முறையில் தேர்தலை நடத்த 45 துணை ராணுவப் படைப்பிரிவுகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் நேரடி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. கேரளா மற்றும் அசாமிலும் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கருத்துக் கணிப்புகளுக்குத் தடை
ஐந்து மாநிலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் 9-ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை 6:30 மணி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை (Exit Polls) நடத்தவோ அல்லது ஊடகங்களில் வெளியிடவோ இந்தியத் தேர்தல் ஆணையம் கடுமையான தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீரான மற்றும் நேர்மையான வாக்குப்பதிவை உறுதி செய்ய அனைத்து மாநில எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
