தமிழக அரசியல் களத்தில் ஆட்சி அமைப்பதற்கான பலப்பரீட்சை ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் தங்களது ஆதரவை உறுதி செய்திருந்த நிலையில், ஐயூஎம்எல் கட்சியின் இந்த முடிவு தவெக-வின் பலத்தை 120 ஆக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணைத் தாண்டி, கூடுதல் பலத்துடன் விஜய் தனது அரசியல் பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர உள்ளார்.
நிபந்தனையற்ற ஆதரவும் ஆளுநருக்கான பட்டியலும்
சிறுபான்மையின மக்களின் உரிமைகளையும், மதச்சார்பற்ற கொள்கைகளையும் பாதுகாக்கும் வகையில் இந்த ஆதரவை வழங்குவதாக ஐயூஎம்எல் தலைமை தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஆளுநர் அர்லேகர் ‘118 எம்எல்ஏ-க்களின் பட்டியலை அளித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைக்க முடியும்’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்த நிலையில், இந்த கூடுதல் ஆதரவு விஜய்க்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது. அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களையும் ஒருங்கிணைத்து, ஒரு வலுவான பட்டியலை ஆளுநர் மாளிகையில் சமர்ப்பிக்க தவெக நிர்வாகிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
