ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 16 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த இழுபறி, தற்போது கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி இறுதி வடிவம் பெறுவதற்கு முன்பாகவே பல கட்சிகள் தனித்தனியாக வேட்புமனுத் தாக்கல் செய்தன. இதன் உச்சகட்டமாக, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனித்துப் போட்டியிடும் என்ற அதிரடி அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் திமுக-விசிக இடையே இன்னும் தொகுதிப் பங்கீடு முடிவடையாத நிலையில், விசிக இரட்டை இலக்கத் தொகுதிகளைக் கேட்டு வரும் வேளையில் பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், புதுச்சேரியில் விசிக மூன்று தொகுதிகளில் தனித்துக் களம் இறங்கப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக, காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீடு இழுபறி
இது தொடர்பாகத் திருமாவளவன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், கடந்த பல ஆண்டுகளாகப் புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விசிக அங்கம் வகித்து வருவதாகவும், தொடர்ந்து தேர்தல்களைக் கூட்டணியுடனேயே சந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட விசிக, 2021 ஆம் ஆண்டு காங்கிரஸ் உழவர்கரை பொதுத் தொகுதியை மட்டுமே ஒதுக்கிய போதிலும், கூட்டணிக்கு நெருக்கடி வரக்கூடாது என்பதற்காக அதனை ஏற்றுக்கொண்டது. கூட்டணி கட்சிகளின் போதிய ஒத்துழைப்பு கிடைக்காத போதிலும், சுமார் ஆறாயிரம் வாக்குகளுக்கு மேலாகப் பெற்றோம் என்று அவர் நினைவு கூர்ந்தார். தற்போது நடைபெறவிருக்கும் தேர்தலுக்காக விசிக தரப்பில் இருந்து மூன்று தொகுதிகள் கேட்கப்பட்டிருந்தன.
ஆனால், வேட்புமனுத் தாக்கல் முடிந்து நீண்ட இழுபறிக்குப் பிறகே திமுக, காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டியிடுவதால், மற்ற கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்க முன்வரவில்லை. திமுக தரப்பில் இருந்து விசிகவுக்கு ஒரு இடத்தை ஒதுக்க முன்வந்தாலும், அது எந்தத் தொகுதி என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும், காங்கிரஸ் கட்சி விசிக மற்றும் சிபிஐ வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது. இதுவரை விசிகவுக்கு எந்தத் தொகுதி என்பதே தெரியாத நிலை உள்ளது. இதன் காரணமாகக் கட்சியின் நிர்வாகிகள் தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதனால் விசிக சார்பில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள இடங்களில் தனித்துப் போட்டியிட உள்ளோம் எனத் திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி, விசிக ஊசுடு, உழவர்கரை மற்றும் நெட்டப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளில் தனித்துப் போட்டியிட உள்ளது. அதே நேரம், மற்ற இடங்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாகப் போட்டியிடுபவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்கும் விசிக முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
