தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு தினத்தன்று அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளிலும் பணிபுரியும் வாக்களிக்கத் தகுதியுள்ள நபர்களுக்கு இந்த விடுமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்காகப் பணியாளர்களின் ஊதியத்தில் எந்தவிதப் பிடித்தமும் செய்யக்கூடாது என்றும், இந்த விதிகளை மீறும் நிறுவன உரிமையாளர்கள் மீது அபராதத்துடன் கூடிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இந்த உத்தரவு தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்குப் பொருந்தும். மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் கோவா, குஜராத், கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் இந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தங்கள் தொகுதிக்கு வெளியே பணிபுரியும் வாக்காளர்களும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற ஏதுவாக இந்த விடுமுறை உரிமை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் இந்த உத்தரவைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
