தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே நான்காம் தேதி வெளியாக உள்ளது. தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்பு திமுகவுக்கு சாதகமாக அமைந்தாலும் இந்த முறை இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் தமிழக அரசியல் காணாத காட்சியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
2006ல் மட்டுமே மெஜாரிட்டில் இல்லை
தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்களில் வென்றிருக்க வேண்டும். 1965 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் இருந்து வருகிறது. திமுகவை பொறுத்தவரை இதுவரை ஆறு முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. இதில் 2006 தேர்தலை தவிர மற்ற தேர்தல்களில் தனிப் பெரும்பான்மையுடனும் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளது. 2006 ஆம் ஆண்டு மட்டும் கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை.அப்போது காங்கிரஸ், பாமகவின் தயவினால் கருணாநிதி முதலமைச்சரானார்.
2021ல் மீண்டும் ஆட்சி - மாறிய கள நிலவரம்
கிட்டதட்ட 10 ஆண்டுகள் கழித்து 2021ல் தான் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதற்குள் கருணாநிதி மறைந்த நிலையில் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்று 5 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டார். இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சிக்கு வந்தது. இப்போது 2026 தேர்தலும் முடிந்து விட்டது. இந்த 5 ஆண்டுகளில் கள நிலவரம் மாறி விட்டது.
இந்த தேர்தலில் தங்கள் கூட்டணி ஜெயிக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவித்திருப்பது திமுக கூட்டணி தொண்டர்களிடையே மகிழ்ச்சியை கொடுத்திருந்தாலும் அது திமுக தலைமைக்கு கலக்கத்தை கொடுத்திருக்கிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேர்ந்து 159 இடங்களையும், அதிமுக கூட்டணி 75 இடங்களையும் கைப்பற்றியது. இதில் திமுக 188 இடங்களில் போட்டியிட்டு 133 தொகுதிகள் வென்று, அதாவது தனித்து ஆட்சியமைக்கக்கூடிய வகையில் பெரும்பான்மை பெற்றது.
ஆனால் 2026 தேர்தலில் சிதறும் வாக்குகளால் பெரும்பான்மை கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என தெரியாமல் திமுக தலைமை குழம்பி வருகிறது.
ஸ்கெட்ச் போட்ட காங்கிரஸ்
அதே சமயம் இந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் தோற்ற தேசிய கட்சியான காங்கிரஸ் அதிகாரம் இருந்தால் மீண்டும் வலுவான கட்சியாக மாறலாம் என கணக்குப் போட்டுள்ளது. தென் மாநிலங்களில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திமுகவிடம் வெளிப்படையாக கேட்டது.
இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் ஆட்சியில் பங்கு என்பதில் உறுதியாக இருந்தனர். மேலும் 2006 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தபோதே அதனை கேட்டிருக்க வேண்டும். அப்போது தவற விட்டு விட்டோம். இப்போது முடியாது என்ற ரீதியில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தது சர்ச்சையை கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து சோனியா காந்தி, ப.சிதம்பரம் போன்றோர் தலையிட்டால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடங்க நீடித்து தேர்தலை சந்தித்துள்ளது. ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தேவையான இடங்களை திமுக ஒதுக்கவில்லை. அதனால் அதிருப்தி அடைந்த ராகுல் காந்தி முதலமைச்சர் ஸ்டாலினுடன் உரை மேடையில் பரப்பரையை கூட மேற்கொள்ளவில்லை என சொல்லப்பட்டது.
ஒன்று சேர்ந்த கூட்டணி கட்சிகள்
அதேசமயம் கூட்டணியில் இடம்பெற்று இருந்த மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு 2021 ஆம் தேர்தலில் வழங்கப்பட்டதை விட குறைவான இடங்களை இந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டது. இதனால் அக்கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் மே 4ம் தேதி ஒருவேளை திமுகவுக்கு ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் தங்கள் பலம் என்ன என்பதை காட்ட கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளது.
அதன் வெளிப்பாடாக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் ஆட்சியில் பங்கு என்பதை சூசகமாக தெரிவித்தார். இதே போல் கூட்டணியில் இருக்கும் தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மே 4க்குப் பிறகு அது பற்றி பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை பற்றி பேசி இருப்பதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் திமுக கடந்த ஐந்து ஆண்டுகளில் இளைஞர்களுக்கு எதுவும் செய்யவில்லை என பகிரங்கமாக குற்றம்சாட்டி இருப்பதும் மறைமுகமாக கொடுக்கப்படும் நெருக்கடியாகவே பார்க்கப்படுகிறது.
அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனும் இந்த தேர்தலில் சில தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு தங்கள் கட்சி தொண்டர்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு உள்ளார். ஆக மொத்தம் தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் திமுக கூட்டணியில் இப்போதே விரிசல் விழ தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறிவிட்டது. ஆட்சி மாறினால் காட்சியும் மாறும் வாய்ப்பு உள்ளது.. ஆட்சி மாறுமா என்பதைக் காண மே 4 வரை காத்திருங்கள்.
