2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெற்று விடக்கூடாது என்பதில் அதிமுக, தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகளை விட தமிழக வாழ்வுரிமைக் கட்சி விரும்புவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற முடிந்தது. தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 85.10 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய நான்குமுனை போட்டி நிலவியது.
அதே சமயம் சசிகலா - ராமதாஸ் கூட்டணி,தமிழக வாழ்வுரிமைக் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் பல இடங்களில் போட்டியிட்டது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றது. அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
திமுக கூட்டணியை முறித்த வேல்முருகன்
ஆனால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியான போது தங்கள் கட்சிக்கு குறைந்தபட்சம் பண்ருட்டி, நெய்வேலி ஆகிய இரண்டு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதில் வேல்முருகன் தீவிரமாக இருந்தார். ஆனால் போட்டி கடுமையாக இருந்ததாலும், புதிதாக தேமுதிக கூட்டணிக்கு வந்ததாலும் திமுக அதன் பிற கூட்டணி கட்சிகளுக்கு முன்னதாக கொடுத்த இடங்களை குறைத்தது.
அதன்படி வேல்முருகனுக்கு மீண்டும் ஒரு தொகுதி ஒதுக்குவதில் அக்கட்சி தீவிரம் காட்டியது. அதனை ஏற்றுக் கொள்ளாத வேல்முருகன் கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். அதேசமயம் திமுக அரசு மீது அடுக்கடுக்கான புகார்களை முன் வைத்தார். இது அரசியல் களத்தில் பரபரப்பையும் திமுகவினர் இடையே புகைச்சலையும் ஏற்படுத்தியது.
தேர்தல் களத்தில் மோதல்
இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி 170 இடங்களில் கேமரா சின்னத்தில் போட்டியிட்டது. பல இடங்களில் தவாக - திமுக கூட்டணி கட்சியினரிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இப்படியான பரபரப்புக்கு மத்தியில் திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளது.
இதனால் தவாக தலைவர் வேல்முருகன் மற்றும் அக்கட்சி தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சட்டசபையில் வேல்முருகன் - சபாநாயகர் அப்பாவு இடையே முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் வாக்குவாதம் ஏற்பட்டது. திமுக கூட்டணியில் இருந்தபோதிலும், தான் பேசுவதை சபாநாயகர் அப்பாவு தடுப்பதாக வேல்முருகன் குற்றம் சாட்டினார்.
கூட்டணியில் இருந்து வெளியேறிய நாளில் திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். வன்னியர் இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, மேயர் தொடங்கி உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளை ஒதுக்க சொல்லி கேட்டது வரை எதையும் மு.க.ஸ்டாலின் பொருட்படுத்தவில்லை என ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.
ஒருவேளை திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் தனக்கு குடைச்சல் கொடுக்கும் என்பது வேல்முருகனின் கணக்காக உள்ளது. தன் மீதும், தவாக தொண்டர்கள் மீது இருக்கும் பழைய வழக்குகளைத் தோண்ட ஆரம்பித்தால் சிக்கலாகி விடும் என்பதால் தன்னுடைய சட்ட நிபுணர்களுடன் இந்த சூழலை எப்படி எதிர்கொள்ளலாம் என இப்போதே வேல்முருகன் பிளான் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் மே 4ல் வெளியாகும் தேர்தல் முடிவு திமுக, தவெக, நாதக கட்சிகளை விட தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.
