2026 சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உற்சாகமூட்டும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என காத்திருந்தவர்களின் கனவு தவிடுபொடியாகிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் நேரடியாகக் களம் காண்பதை உறுதி செய்துள்ள அவர், தோழமைக் கட்சிகளுடன் ஜனநாயகப்பூர்வமாகப் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்தாண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை முன்வைத்து இந்தத் தேர்தலைச் சந்திப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட தோழமை இயக்கங்களின் தலைவர்களுடன் நேரில் பேசி, நிலவும் அரசியல் சூழலை விளக்கி இந்த இடப்பங்கீடு இறுதி செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவையும் அவர் பாராட்டியுள்ளார். 234 தொகுதிகளுமே நம்முடைய தொகுதிகள் தான் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், உதயசூரியன் மட்டுமல்லாது கூட்டணி கட்சிகளின் கை, முரசு, அரிவாள் சுத்தி நட்சத்திரம், பானை, ஏணி ஆகிய அனைத்துச் சின்னங்களையும் நமது சின்னங்களாகக் கருதி உழைக்க வேண்டும் எனத் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தல் வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற 16,500 தொண்டர்களின் எழுச்சி தனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளதாகக் கூறியுள்ள அவர், அடுத்த நான்கு வாரங்கள் எவ்விதக் கவனச்சிதறலும் இன்றி இலக்கை நோக்கிப் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவின் மதவாத அரசியலை வீழ்த்தவும், சமூக நீதி காக்கவும் இந்த வெற்றிக் கூட்டணி உறுதியுடன் செயல்படும் என்றும், வதந்திகளைப் புறக்கணித்துவிட்டுத் தேர்தல் களத்தில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
