தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக தனது 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தப் பட்டியலை வெளியிட்டார். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர். அமைச்சர்களான துரைமுருகன் காட்பாடியிலும், கே.என்.நேரு, திருச்சி மேற்கிலும், ஐ.பெரியசாமி ஆத்தூரிலும், எ.வ.வேலு திருவண்ணாமலையிலும், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குறிஞ்சிப்பாடியிலும், சாத்தூர் ராமச்சந்திரன் அருப்புக்கோட்டையிலும், தங்கம் தென்னரசு திருச்சுழியிலும் களம் காண்கின்றனர். மேலும் ரகுபதி திருமயத்திலும், முத்துசாமி ஈரோடு மேற்கிலும், பெரியகருப்பன் திருப்பத்தூரிலும், தா.மோ.அன்பரசன் ஆலந்தூரிலும், மு.பெ.சாமிநாதன் காங்கேயத்திலும், கீதா ஜீவன் தூத்துக்குடியிலும், அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூரிலும், ராஜ கண்ணப்பன் முதுகுளத்தூரிலும் போட்டியிட வாய்ப்புப் பெற்றுள்ளனர்.
அதேபோல் ராஜேந்திரன் சேலம் வடக்கிலும், சக்கரபாணி ஒட்டன்சத்திரத்திலும், மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டையிலும், மூர்த்தி மதுரை கிழக்கிலும், எஸ்.எஸ்.சிவசங்கர் குன்னத்திலும், சேகர்பாபு சென்னை துறைமுகத்திலும், கோவி.செழியன் திருவிடைமருதூரிலும், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்தியிலும் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் சா.மு.நாசர் ஆவடியிலும், அன்பில் மகேஸ் திருவெறும்பூரிலும், மெய்யநாதன் ஆலங்குடியிலும், சி.வி.கணேசன் திட்டக்குடியிலும், டி.ஆர்.பி. ராஜா மன்னார்குடியிலும், மதிவேந்தன் ராசிபுரத்திலும் போட்டியிடுகின்றனர். சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ராதாபுரத்திலும், துணைத் தலைவர் கு.பிச்சாண்டி கீழ்பென்னாத்தூரிலும் மீண்டும் களம் இறங்குகின்றனர். இந்த முறை அமைச்சர்கள் மனோ தங்கராஜ், காந்தி, கயல்விழி செல்வராஜ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, ராமச்சந்திரன் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி ராணிப்பேட்டையிலும், பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி திருக்கோவிலூரிலும், ரகுமான்கானின் மகன் சுபேர்கான் ராயபுரத்திலும், ஜே.அன்பழகனின் மகன் ராஜா தியாகராய நகரிலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இம்முறை கோவை தெற்கு தொகுதியிலும், செஞ்சி மஸ்தான் செஞ்சி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போடியிலும், வைத்திலிங்கம் ஒரத்தநாட்டிலும், மனோஜ் பாண்டியன் ஆலங்குளத்திலும், தோப்பு வெங்கடாசலம் பெருந்துறையிலும் போட்டியிட வாய்ப்புப் பெற்றுள்ளனர். எடப்பாடி தொகுதியில் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியை எதிர்த்துப் புதுமுகமான காசி களம் காண்கிறார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் திமுக சார்பில் மகாராஜன் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து அவரது தம்பி லோகிராஜன் அதிமுக சார்பில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இந்த வேட்பாளர் பட்டியலில் 18 பெண்கள், 125 பட்டதாரிகள், 15 மருத்துவர்கள் மற்றும் 29 வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர். 121 தொகுதிகளில் திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதுகின்றன.
கூட்டணி கட்சிகளையும் சேர்த்து மொத்தம் 175 பேர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். பட்டியல் வெளியீட்டிற்குப் பிறகு அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின் பேசிய உதயநிதி ஸ்டாலின், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.
