தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத அளவிலான குதிரை பேர முயற்சிகள் தற்போது அரங்கேறி வருவதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தில் ‘மாற்றம்’ கொண்டு வரப்போவதாகக் கூறிக்கொண்டவர்கள், ஆட்சிப் பொறுப்புக்கு வரும் முன்பே இத்தகைய மோசமான அரசியலில் ஈடுபடுவது இப்போதுதான் புரிகிறது எனச் சாடியுள்ளார். 108 இடங்களைப் பிடித்துள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கத் தீவிரம் காட்டி வரும் சூழலில், இந்த விமர்சனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
திடீரென மாயமான அமமுக எம்எல்ஏ: டிடிவி தினகரன் பகீர் புகார்
ஆட்சி அமைக்கத் தேவையான மெஜாரிட்டியைத் திரட்ட தவெக தலைவர் விஜய் ஆளுநர் அர்லேகரைச் சந்தித்து உரிமை கோரிய நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஒரு வெடியைப் போட்டார். தங்கள் கட்சியின் ஒரே எம்எல்ஏவான காமராஜைக் காணவில்லை என்றும், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். தவெகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டுத் தங்கள் எம்எல்ஏ-வை இழுக்கப் பார்ப்பதாக அவர் பரபரப்பு புகார் அளித்தார். முன்னதாகக் காமராஜ் அதிமுகவை ஆதரிப்பதாகக் கடிதம் அளித்திருந்த நிலையில், திடீரென அவர் காணாமல் போனது அரசியல் வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது.
ஆளுநர் மாளிகையில் நள்ளிரவு விசாரணை: காமராஜ் விளக்கம்
இந்தக் குழப்பங்களுக்கு விடை தரும் வகையில், நள்ளிரவு 12 மணியளவில் அமமுக எம்எல்ஏ காமராஜ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் ஆளுநர் மாளிகைக்கு நேரில் வந்தனர். செய்தியாளர்களிடம் பேசிய காமராஜ், தான் புதுச்சேரியில் தங்கியிருந்ததாகவும், ஆளுநர் மாளிகையிலிருந்து அழைப்பு வந்த பிறகே வழக்கறிஞர்களுடன் ஆலோசித்துவிட்டு நேரில் வந்ததாகவும் தெரிவித்தார். தான் தவெக-வுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும், வாட்ஸ்அப் வசதி இல்லாத சாதாரண போனையே தான் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார். இருப்பினும், காமராஜ் கைப்பட ஆதரவுக் கடிதம் எழுதும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, இந்த விவகாரத்தில் அடுத்தடுத்த திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.
