தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நிலவும் அதிரடி மாற்றங்களால், ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வாய்ப்பு நழுவி வருகிறது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் எனக் கணித்திருந்த நிலையில், அதற்கு மாறாகத் தமிழக வெற்றிக் கழகம் தற்போது 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி 66 இடங்களிலும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 62 இடங்களிலும் மட்டுமே முன்னிலை வகிக்கின்றன.
திமுக 2.0 ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையில் இருந்த உடன்பிறப்புகளுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சூழலில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உறவினரான மருத்துவர் ஜெ. ராஜமூர்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. திமுகவின் இந்தத் தோல்விக்குச் சில அரசு அதிகாரிகளும், அமைச்சர்களுமே முக்கியக் காரணம் என அவர் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவரது இந்தப் பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அறிவாலயத்தில் நிலவும் சோகம்
வெற்றி நிச்சயம் என்ற எதிர்பார்ப்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிரம்மாண்டமான கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் கட்சிக்குச் சாதகமாக இல்லாததால், அனைத்துக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டன. இதனால் அறிவாலயத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் மிகுந்த மனவேதனையுடன் கலைந்து சென்றனர்.
அங்கிருந்த திமுக தொண்டர் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பெண்கள் மற்றும் பொதுமக்களுக்காக அரசு இவ்வளவு நன்மைகளைச் செய்தும் ஏன் இந்தத் தோல்வி ஏற்பட்டது என வினவி, கண்ணீர் விட்டு கதறி அழுதது காண்போரை நெகிழச் செய்தது. பலத்த பாதுகாப்புடன் காணப்பட்ட கட்சித் தலைமை அலுவலகம், தற்போது எதிர்பாராத சரிவினால் நிசப்தமாகிக் காணப்படுகிறது.
