DMK - Congress | இரண்டே ஆப்ஷன் தான் ... சாட்டையை சுழற்றப்போவது யார்? - திமுக vs காங்கிரஸ் மோதல்!

இதற்கு முன்பே கூட்டணி முறிவை ஏற்படுத்திய திமுகவால் மீண்டும் அதனை செய்ய தயங்காது என்பது காங்கிரஸ் கட்சிக்கும் தெரியும். சொல்லப்போனால் தேர்தலுக்குப் பின் திமுக தோற்றால் அதன் கூட்டணி பிளவுபடவும் அதிக வாய்ப்புள்ளது. ஆக மொத்தத்தில் சாட்டையை சுழற்றப்போவது திமுகவா, காங்கிரஸா என்பது மே4க்கு பிறகு தெரிய வரும்.

G

எழுதியவர்

1 மணி நேரத்திற்கு முன்
DMK - Congress | இரண்டே ஆப்ஷன் தான் ... சாட்டையை சுழற்றப்போவது யார்? - திமுக vs காங்கிரஸ் மோதல்!

5 மாநில தேர்தல் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு கேரளம் மாநில சட்டமன்ற தேர்தல் பற்றிய கணிப்புகள் சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. இந்த நிலையில் அக்கட்சி தமிழ்நாட்டில் என்ன மாதிரியான முடிவை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி

சுதந்திரத்துக்குப் பின் தேசிய கட்சியான காங்கிரஸை எதிர்த்து தொடங்கப்பட்டது மாநில கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம். ஒருகட்டத்தில் அவ்விரு கட்சிகளும் கூட்டணி வைக்கும் சூழலும் வந்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அமைச்சரவையில் திமுகவும் இடம்பெற்றது. 2006 தேர்தலில் ஆட்சியமைக்க ஆதரவு தேவைப்பட்டபோது தயங்காமல் காங்கிரஸ் நிபந்தனையின்றி ஒப்புக்கொண்டது. பின்னர் 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது கூட்டணியை முறித்துக் கொண்டு மீண்டும் 2016 தேர்தலில் இணைந்து போட்டியிட்டது.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு

மத்தியில் 2014ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 3 முறை பாஜக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த பல மாநிலங்களில் இன்று ஒரு செங்கல்கூட அக்கட்சிக்கு இல்லை என தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆதரவு இருந்தாலும் கர்நாடகா, தெலுங்கானா மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே அக்கட்சி நேரடியாக ஆட்சியில் உள்ளது.

தற்போது தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி தேர்தல் முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி எண்ணப்படுகிறது. புதுச்சேரியில் மீண்டும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை காங்கிரஸ் கட்சிக்கே குறைவாகவே உள்ளது. அதேசமயம் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அக்கட்சிக்கு உள்ளது.

ஆனால் நம் செல்வாக்கை நிலைநாட்ட வேண்டுமென்றால் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும். வலுவான கட்சியை மீண்டும் கட்டமைக்க வேண்டும் என்ற எண்ணம் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே உள்ளது. அதற்கு அச்சாரம் போடும் விதமாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கை தமிழ்நாடு காங்கிரஸின் முன்னணி நிர்வாகிகள் எழுப்பினர்.

சொல்லப்போனால் தமிழ்நாடு அப்படி ஒரு கூட்டணி ஆட்சி நிலையை இதுவரை சந்திக்கவில்லை. அது நிச்சயம் தங்களுக்கு எதிராக அமையும் என்பது இதுவரை ஆண்ட திமுக, அதிமுக கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும்.

திமுகவுக்கு காங்கிரஸ் நெருக்கடி

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிராகரித்து விட்டார். அகில இந்திய தலைமையின் உத்தரவால் தேர்தல் முடியும் வரை காங்கிரஸ் நிர்வாகிகள் அமைதி காத்த நிலையில் மீண்டும் ஆட்சியில் பங்கு கேட்டு திமுகவை நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கேரளத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வாய்ப்பு என்ற கருத்துக்கணிப்பு முடிவு அவர்களை மேலும் தூண்டியுள்ளது.

ஒருவேளை கேரளத்தில் வெற்றி பெற்றால் அதனை வைத்து தமிழ்நாட்டில் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் முடிவு செய்யலாம். அதேபோல் இங்கு திமுக பெரும்பான்மை பெற தவறினால் தங்கள் கொள்கையில் அவர்கள் வெற்றி காண வாய்ப்புள்ளது. ஆனால் திமுக தோற்று விட்டால் நிச்சயம் காங்கிரஸ் கட்சியை கழட்டி விடவும் வாய்ப்புள்ளது. 2016 தேர்தலில் திமுக தோற்பதற்கு முக்கிய காரணங்களில் அக்கட்சிக்கு அதிக சீட் வழங்கியது தான் என்ற குற்றச்சாட்டு இன்றளவும் அரசியல் களத்தில் எதிரொலித்து வருகிறது.

அப்படியிருக்கையில் இதற்கு முன்பே கூட்டணி முறிவை ஏற்படுத்திய திமுகவால் மீண்டும் அதனை செய்ய தயங்காது என்பது காங்கிரஸ் கட்சிக்கும் தெரியும். சொல்லப்போனால் தேர்தலுக்குப் பின் திமுக தோற்றால் அதன் கூட்டணி பிளவுபடவும் அதிக வாய்ப்புள்ளது. ஆக மொத்தத்தில் சாட்டையை சுழற்றப்போவது திமுகவா, காங்கிரஸா என்பது மே4க்கு பிறகு தெரிய வரும்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...