நான்காவது முறையாகக் களம் காணும் முதல்வர்
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் வந்து மனு வழங்கிய அவர், இத்தொகுதியில் தொடர்ந்து நான்காவது முறையாகப் போட்டியிடுகிறார். மனுத்தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த மூன்று தேர்தல்களை விடவும் தற்போது மக்களிடம் எழுச்சியும் பேராதரவும் அதிகரித்துள்ளதை நேரடியாக உணர முடிகிறது என்றார். நேற்று வெளியிடப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், வரும் தேர்தலில் திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெறும் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும், 2011 முதல் கொளத்தூர் மக்கள் தன் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையால், இந்த முறையும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தன்னை வெற்றிபெறச் செய்வார்கள் என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தமிழகம் முழுவதும் திமுகவின் தேர்தல் பிரசாரம் வழக்கம்போலத் தீவிரமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இத்தொகுதியில் முதல்வரை எதிர்த்து அதிமுக சார்பில் சந்தான கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் சவுந்திர பாண்டியன் மற்றும் தவெக சார்பில் வி.எஸ்.பாபு ஆகியோர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
