தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், அதிமுக மீண்டும் உடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிற கட்சிகளின் ஆதரவை நாடும் விஜய்
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில் இதில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் விஜய்க்கு இன்னும் 10 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. அதனால் அவர் திமுக தவிர்த்து பிற கட்சிகளின் ஆதரவை கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருமாறு விஜய் கடிதம் அனுப்பியிருந்தார். இதில் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அந்தக் கட்சி இந்த சட்டமன்றத் தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகளும் ஓரிரு நாட்களில் தங்களது ஆதரவை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாக உடையும் அதிமுக
இந்த நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள அதிமுக நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது. 2016 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றது தொடங்கி அவர் அதிமுக பொதுச் செயலாளர் மாறியது பின் நடந்த அத்தனை தேர்தல்களிலும் அக்கட்சி தோல்வியுற்றுள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடியான ஒன்றாக அமைந்துள்ளது. மேலும் அவர் மீது கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதிமுகவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்திற்கு தற்போது ஆதரவளித்தால் எதிர்காலத்தில் வரும் தேர்தலில் எதிர்க்கட்சியாக வரும் வாய்ப்பாவது நமக்கு கிடைக்கும் என்பது அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இடையே ஒருமித்த கருத்தாக திகழ்கிறது. இந்த நிலையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சி.வி.சண்முகம் உள்ளிட்ட ஒரு சில அதிமுக எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக கருத்து வேறுபாடு நிலவுவதால் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடி
ஏற்கனவே 2016ஆம் ஆண்டிற்கு பிறகு அதிமுக இரண்டு முறை பிளவுபட்டுள்ளது. இந்த முறை தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. ஆனால் முதலில் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியை விரும்பிய எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதனை அறவே தவிர்த்து வருகிறார். மேலும் கட்சிப்பதவியைக் காப்பாற்றவும் அவர் தவித்து வருகிறார். அவரை ஓரம்கட்டவும் ஒரு பக்கம் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சி.வி.சண்முகம் தலைமையில் 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்கான ரகசிய கூட்டமும் நேற்றிரவு நடைபெற்றுள்ளது. இதன்மூலம் தமிழக மக்களிடையே வலுவான கட்சியாக காட்டி அடுத்து வரும் தேர்தலில் திமுகவை பின்னுக்கு தள்ள முடியும் என்பது தவெக ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.,க்களின் எண்ணமாக உள்ளது. மேலும் தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதால் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் எனவும் அதிமுக கணக்குப் போடுகிறது.
இன்னும் ஒருமுறை அதிமுக உடைந்தால் நிச்சயம் அது யாருக்கு நல்லதோ, கெட்டதோ கட்சிக்கு பேரழிவாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பதவியை காப்பாற்ற தவெகவுக்கு ஆதரவு கொடுப்பாரா அல்லது அதிமுக அழிவுக்கு காரணமாக இருப்பாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.
