தமிழக சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ள நிலையில், வரும் மே 4-ம் தேதி (திங்கள்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. எந்தக் கட்சி அரியணையில் அமரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ள சூழலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி மீண்டும் 'ஆட்சியில் பங்கு' என்ற கோரிக்கையை வலுவாக முன்வைக்கத் தொடங்கியுள்ளது. இது அக்ககூட்டணிக்குள் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், தமிழக அரசியலில் காங்கிரஸ் இனி ஒருபோதும் வெறும் பார்வையாளராக இருக்கப் போவதில்லை என்றும், கட்சி தற்போது புத்துயிர் பெற்று அடிமட்ட அளவில் வலுவாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
உரிமைக் குரல் எழுப்பும் காங்கிரஸ் மேலிடம்
தமிழகம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதில் தொண்டர்கள் முதல் தேசியத் தலைவர்கள் வரை உறுதியாக இருப்பதாகவும், கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் முதல்வராவது உறுதி எனக் கூறிய அவர், பாஜகவை வீழ்த்த ஐந்து மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டது இதுவே முதல்முறை என்றார். தேர்தலுக்குப் பிந்தைய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் நடந்து வருவதாகவும், முடிவுகள் வரும் வரை பொறுமை காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதிகாரப் பகிர்வு குறித்த உறுதி
இருப்பினும், காங்கிரஸ் கட்சி இனி ஆட்சியில் அங்கம் வகிக்க வேண்டும் அல்லது பிரதான எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், தேர்தல் வெற்றிக்குப் பின் இதற்கான உரிமைகளைத் திமுகவிடம் வலியுறுத்திக் கேட்போம் என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே கூடுதல் தொகுதிகள் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகளை காங்கிரஸ் முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
