தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிய நிலையில், முக்கியத் தலைவர்கள் தங்களது மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், தான் தொடர்ந்து போட்டியிட்டு வரும் கொளத்தூர் தொகுதியில் 4-ஆவது முறையாக இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் வர, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவர் தனது மனுவை வழங்கினார். இதேபோல், பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். பெரம்பூர் தவிர்த்து அவர் திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில் நட்சத்திரத் தொகுதியாகக் கருதப்படும் பெரம்பூரில் தவெக சார்பில் விஜய்யும், திமுக சார்பில் ஆர்.டி.சேகரும் களம் காண்கின்றனர். இவர்களுடன் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் ம.திலகபாமா மற்றும் நாம் தமிழர் கட்சியின் வெற்றித்தமிழன் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றனர். அதேபோல், கொளத்தூர் தொகுதியில் 2011 முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் மு.க.ஸ்டாலினை எதிர்த்து, அதிமுக சார்பில் சந்தான கிருஷ்ணன், நாம் தமிழர் சார்பில் சவுந்திர பாண்டியன் மற்றும் தவெக சார்பில் வி.எஸ்.பாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர். முக்கியத் தலைவர்கள் முதல் நாளிலேயே மனுத்தாக்கல் செய்துள்ளதால் தமிழகத் தேர்தல் களம் தற்போது பெரும் பரபரப்பை எட்டியுள்ளது.
