தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம் மற்றும் குடிநீர் வசதிகள் போன்ற முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் வசிக்கும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் தபால் வாக்குப்பதிவு முறை ஏப்ரல் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இதற்காக தேர்தல் அலுவலர்கள் நேரடியாக வாக்காளர்களின் இல்லங்களுக்கே சென்று வாக்குகளைச் சேகரிப்பார்கள். அதேபோல், காவல்துறை மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தேதிகள் மாற்றப்பட்டு, அவர்கள் வரும் ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தபால் வாக்கு மையங்களில் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
