அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட காந்தி ராஜ், சுமார் 73,358 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். தொடக்கம் முதலே முன்னிலை வகித்த அவர், ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தை தொடர்ந்து உயர்த்தி இறுதியில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளார்.
விராலிமலை தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், சுமார் 59,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அவர் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார். இந்த தொகுதியில் திமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட நிலையில், தவெக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா, 10,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கந்தர்வக்கோட்டை தொகுதியில் தவெக வேட்பாளர் சுப்பிரமணியன், 12,663 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், மதுரை மத்திய தொகுதியில் தவெக வேட்பாளர் முஸ்தபா வெற்றி பெற்றுள்ளார்.
திருவாரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன், 1,777 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கடும் போட்டி நிலவி வரும் வேளையிலும், இந்த தொகுதியில் திமுக தனது நிலையை தக்க வைத்துள்ளது.
மதுரவாயில் சட்டமன்ற தொகுதியில் தவெக கட்சியின் வேட்பாளர் ரேவந்த் சரண் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளார். அவர் தனது எதிரணி வேட்பாளரை 56,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து கவனம் ஈர்த்துள்ளார். இந்த வெற்றி தவெக கட்சிக்கு முக்கியமான பலமாக பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, வாணியம்பாடி தொகுதியில் திமுக கூட்டணியின் வேட்பாளர் ஐ. சயூத் பாரக் வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 72,872 வாக்குகள் பெற்று வெற்றியை உறுதி செய்தார். இந்த தொகுதியில் திமுக கூட்டணியின் ஆதரவு வலுவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
