விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்டப் பொறுப்பு மற்றும் தேர்தல் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்த தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த அஜிதா ஆக்னல், தவெகவின் மத்திய மாவட்டச் செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், அந்தப் பதவி சாமுவேல்ராஜ் என்பவருக்கு வழங்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த அவர், சென்னையில் விஜய்யின் காரை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டார். அந்தப் போராட்டம் தோல்வியடைந்த நிலையில், மனமுடைந்து தற்கொலை முயற்சி வரை சென்றவர், பின்னர் மீண்டும் கட்சிப் பணிகளில் தொடர்ந்தார்.
இந்நிலையில், வரவிருக்கும் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கோரியிருந்த அஜிதாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த இடத்திற்கு நடிகர் ஸ்ரீநாத்தை விஜய் வேட்பாளராக அறிவித்ததால், தீவிர அதிருப்தி அடைந்த அஜிதா நேற்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தவெகவில் பெண்களுக்கு முறையான அங்கீகாரம் இல்லை என்பதே தமது விலகலுக்குக் காரணம் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
