Actors to Politician | நடிகர்கள் TO அரசியல் தலைவர்கள்... ஒரு வரலாற்றுப் பயணம்

திரைத்துறையில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்த எம்.ஜி.ஆர் முதல் இன்று தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் விஜய் வரை, இவர்களது முதல் தேர்தல் சவால்கள் மற்றும் வாங்கிய வாக்கு சதவீதங்கள் குறித்த ஒரு விரிவான பார்வை

1 மணி நேரத்திற்கு முன்
Actors to Politician | நடிகர்கள் TO அரசியல் தலைவர்கள்... ஒரு வரலாற்றுப் பயணம்

திரைத்துறையில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்த எம்.ஜி.ஆர் முதல் இன்று தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் விஜய் வரை, இவர்களது முதல் தேர்தல் சவால்கள் மற்றும் வாங்கிய வாக்கு சதவீதங்கள் குறித்த ஒரு விரிவான பார்வை

நடிகர்கள் TO அரசியல் தலைவர்கள்

சினிமா புகழை மூலதனமாகக் கொண்டு அரசியலில் குதிக்கும் நடிகர்களுக்கு ஆரம்பம் என்பது எப்போதும் ஒரு 'அக்னி பரீட்சை' தான். சிலர் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தனர், சிலர் களத்தில் நிற்கப் போராடினர்.

வரலாறு படைத்த புரட்சித் தலைவர் MGR

எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, 1972-ல் அதிமுகவைத் தொடங்கி ஒரு நடிகரால் தனியாகக் கட்சி நடத்தி வெல்ல முடியுமா? என்ற ஏளனப் பேச்சுகளுக்கு 1977 சட்டமன்றத் தேர்தல் முற்றுப்புள்ளி வைத்தது. மற்ற தலைவர்கள் மேடையில் பேசி வாக்குகளைச் சேகரித்தபோது, எம்.ஜி.ஆர் தனது சினிமா படங்கள் மூலமாகவே அரசியல் கொள்கைகளைப் பரப்பினார். காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி 'சத்துணவுத் திட்டமாக' மாற்றினார். விதவை பெண்களுக்கு உதவித்தொகை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

கட்சி தொடங்கிய 5 ஆண்டுகளில் முதன் முதலில் எம்.ஜி.ஆர் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதிமுக கூட்டணி 30.3% வாக்கு சதவீததுடன் 234 இடங்களில் 144 இடங்களில் வெற்றி பெற்றது. அன்று பதிவான 67% வாக்குகளில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வாக்குகளை ஒரு புதிய கட்சி பெற்றது இந்திய அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்திய அரசியல் வரலாற்றில், முதலமைச்சரான பிறகு தான் மறைந்த வரை நடந்த எந்தத் தேர்தலிலும் தோற்காத பெருமை எம்.ஜி.ஆர்-யே சேரும்.

கடவுளாகக் கொண்டாடப்பட்ட நடிகர் என்.டி. ராமாராவ்

அரசியலுக்கு வருவதற்கு முன்பே என்.டி.ஆர் ஆந்திர மக்களால் கடவுளாகவே பார்க்கப்பட்டவர். கிருஷ்ணர், ராமர் போன்ற வேடங்களில் அவர் நடித்தபோது, மக்கள் திரையரங்குகளிலேயே கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இந்த ஆன்மீகப் பிம்பம் அவர் அரசியலுக்கு வந்தபோது ஒரு மிகப்பெரிய வாக்கு வங்கியாக மாறியது. காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த ஆந்திராவில், தெலுங்கு மக்களின் சுயமரியாதை (என்ற முழக்கத்தோடு தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கினார். தனது பழைய செவ்ரோலெட் வேனை ஒரு பிரச்சார வாகனமாக மாற்றி, அதற்கு சைதன்ய ரதம் என்று பெயரிட்டு மாநிலம் முழுவதும் சுமார் 75,000 கிலோமீட்டர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். எம்.ஜி.ஆரைப் போலவே என்.டி.ஆரும் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களில் அதிக கவனம் செலுத்தினார்

கட்சி தொடங்கி வெறும் 9 மாதங்களில் நடந்த தேர்தலில், 46% சதவீத 294 இடங்களில் 202 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தார். இந்திய அரசியல் வரலாற்றில் இது ஒரு முறியடிக்க முடியாத சாதனையாக இன்றும் உள்ளது. காங்கிரஸ் கோட்டையாக இருந்த ஆந்திராவை ஒரே ஆளாகச் சாய்த்த பெருமை இவருக்கு உண்டு.

சிரஞ்சீவியின் இமாலயப் போராட்டமும் முடிவுகளும்

தெலுங்குத் திரையுலகில் மெகாஸ்டார் என்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த சிரஞ்சீவியின் அரசியல் வருகை எம்.ஜி.ஆர், என்.டி.ஆருக்குப் பிறகு ஒரு சினிமா நட்சத்திரம் முதலமைச்சராகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தருணம். சிரஞ்சீவி, 2008-ல் பிரஜா ராஜ்யம் கட்சியைத் தொடங்கினார். சமூக நீதி என்பதே அவரது முதன்மையான முழக்கமாக இருந்தது. குறிப்பாக ஆந்திராவில் உள்ள காப்பு சமூக மக்களின் ஆதரவு அவருக்குப் பெரும் பலமாகப் பார்க்கப்பட்டது. இரு துருவங்களுக்கு இடையே சிரஞ்சீவி ஒரு மூன்றாவது மாற்றாக வருவார் என்று நம்பப்பட்டது.

சிரஞ்சீவி கட்சித் தொடங்கி வெறும் 8 மாதங்களில் 2009 சட்டசபைத் தேர்தலைச் சந்தித்தார். விஜய்யைப் போலவே இவரும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். திருப்பதி மற்றும் தனது சொந்த ஊரான பாலக்கொல்லு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அனால் திருப்பதியில் வெற்றி பெற்ற அவர் பாலக்கொல்லு தொகுதியில் அதிர்ச்சிகரமாகத் தோல்வியடைந்தார். அவரது கட்சி 16.32% வாக்குகளைப் பெற்றது. இது ஒரு புதிய கட்சிக்கு மிகப்பெரிய வாக்கு சதவீதம் என்றாலும், 294 இடங்களில் வெறும் 18 இடங்களை மட்டுமே பிரஜா ராஜ்யம் வென்றது. பெரிய எதிர்பார்ப்புடன் வந்தாலும், ஆந்திர அரசியலில் மூன்றாவது சக்தியாக மட்டுமே அவரால் உருவெடுக்க முடிந்தது.

ஆந்திரா - தெலங்கானா பிரிவினையின் போது ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், சிரஞ்சீவி அரசியலில் இருந்து மெல்ல விலகி மீண்டும் சினிமாவுக்கே திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருப்பு எம்.ஜி.ஆரின் கர்ஜனை கேப்டன் விஜயகாந்த்

தமிழக அரசியலில் கருப்பு எம்.ஜி.ஆர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்த் அவர்களின் அரசியல் பயணம், மற்ற நடிகர்களை விட மிகவும் தனித்துவமானது. எவ்வித அரசியல் பின்புலமும் இன்றி, இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் நேரடியாக எதிர்த்து நின்றவர் கேப்டன் 2005-ல் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கினார் விஜயகாந்த். அதிமுக ஒரு பக்கம், திமுக ஒரு பக்கம் எனத் தமிழகமே பிரிந்து கிடந்தபோது, "நான் மக்களுடன் தான் கூட்டணி" என்று கூறி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டார். பாமகவின் கோட்டையாகக் கருதப்பட்ட விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு விஜயகாந்த் வெற்றி பெற்ற நிலையில் தேமுதிக 8.38% பெற்றது. தேமுதிக பிரித்த வாக்குகளால் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டது.

தனது தனித்தன்மையை நிலைநாட்டிய பிறகு, 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது தேமுதிக. திமுகவை விட அதிக இடங்களைப் பெற்று, விஜயகாந்த் தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவரானார். ஒரு நடிகர் கட்சி ஆரம்பித்து ஆறே ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் ஆனது தமிழக அரசியலில் ஒரு மைல்கல். 2014-க்கு பிறகு அவரது உடல்நிலை பாதிப்பு மற்றும் சில அரசியல் தவறுகளால் தேமுதிகவின் வாக்கு சதவீதம் குறையத் தொடங்கியது. ஆனால் விஜயகாந்த் தமிழக அரசியலில் ஒரு மூன்றாவது பாதை சாத்தியம் என்று காட்டியவர்.

பீனிக்ஸ் பறவையாக மீண்டெழுத பவன் கல்யாண்

தெலுங்குத் திரையுலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் அரசியல் பயணம் என்பது ஒரு நீண்ட விடாமுயற்சியின் கதை. தனது அண்ணன் சிரஞ்சீவியின் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, இன்று ஆந்திர அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக ஒரு துணை முதலமைச்சராக உருவெடுத்துள்ளார். 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜனசேனா கட்சியைத் தொடங்கினார் பவன் கல்யாண். ஆனால், மற்ற நடிகர்களைப் போல உடனே தேர்தலில் குதித்து முதலமைச்சராக வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. 2019 ஆம் ஆண்டுதான் பவன் கல்யாண் முதல்முறையாகத் தேர்தலில் நேரடியாகக் களம் கண்டார். ஜனசேனா கட்சி சுமார் 5.5% முதல் 6% வாக்குகளைப் பெற்றது. சிரஞ்சீவியைப் போலவே பவன் கல்யாணும் காஜுவாக்கா மற்றும் பீமாவரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். துரதிர்ஷ்டவசமாக இரண்டு இடங்களிலும் அவர் தோல்வியடைந்தார். 175 இடங்களில் அவரது கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. பலரும் "பவன் கல்யாணின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது" என்று விமர்சித்தனர்.

தோல்விக்குப் பிறகு துவண்டு போய்விடாமல், அடுத்த 5 ஆண்டுகள் மக்களுக்காகக் களத்தில் நின்றார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்க்கு அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டங்களை நடத்தினார். 2024 தேர்தலில் வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காக, தனது ஈகோவைத் தள்ளி வைத்துவிட்டு, சந்திரபாபு நாயுடுவின் TDP மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். இன்று அவர் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறார்.

கமல் ஹாசனின் சவால்களும் சறுக்கல்களும்

கமல் ஹாசனின் அரசியல் பயணம் என்பது தமிழ் திரையுலகின் மற்றொரு உச்ச நட்சத்திரம் மாற்று அரசியல் என்ற முழக்கத்தோடு களம் இறங்கிய மிக முக்கியமான நிகழ்வாகும். 2018-ல் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியைத் தொடங்கிய கமல், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் களம் கண்டார். வலதுசாரி அல்லது இடதுசாரி என எதிலும் சாராமல், மய்யம் என்ற நிலைப்பாட்டை எடுத்தார். ஊழல் எதிர்ப்பு, கிராம சபைகளை வலுப்படுத்துதல் மற்றும் நேர்மையான நிர்வாகம் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு களம் இறங்கினார். சுமார் 3.72% வாக்குகளைப் பெற்றது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் மநீம சுமார் 10% முதல் 12% வரை வாக்குகளைப் பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. குறிப்பாகப் படித்த இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் ஆதரவு கமலுக்குக் கிடைத்தது.

2021 சட்டமன்றத் தேர்தலில் கமல் ஹாசன் ஒரு கூட்டணியை வழிநடத்தினார். அவர் கோவை தெற்கு தொகுதியில் நேரடியாகப் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் கமல் ஹாசன் மிகக்கடுமையாகப் போராடினார். இறுதிச் சுற்று வரை முன்னிலையில் இருந்த அவர், பாஜாகவின் வானதி சீனிவாசனிடம் சுமார் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் மிகக் குறைந்த இடைவெளியில் தோல்வியடைந்தார். மாநில அளவில் மநீம-வின் வாக்கு சதவீதம் 2.62% ஆகக் குறைந்தது.

பின் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியை ஆதரித்த கமல் கூட்டணியின் ஒரு பகுதியாக 2025-ல் அவர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். தற்போது மாற்று அரசியல் என்ற நிலையில் இருந்து மாறி கூட்டணி அரசியல் என்ற யதார்த்தத்தை கமல் ஏற்றுக்கொண்டுள்ளார்.

விஜய் உதயம் முதல் தேர்தல் வரை

2024-ல் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய விஜய், தனது முதல் அரசியல் மாநாட்டிலேயே தத்துவார்த்த ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் தான் ஒரு தீவிரமான அரசியல்வாதி என்பதை நிரூபித்துள்ளார். சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாணைப் போலவே, விஜய் தனது செல்வாக்கை உறுதி செய்ய பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அவரது பிரச்சாரக் கூட்டங்கள் மற்ற நடிகர்களின் கூட்டங்களை விடத் தமிழகத்தில் மிகப்பெரிய மக்கள் கூட்டத்தை ஈர்த்தது. விஜய் சந்திக்கும் முதல் தேர்தலான 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சில புரட்சிகரமான வாக்குறுதிகளை வழங்கினார்.

விஜய்யின் முதல் தேர்தல் முடிவு தமிழக வரலாற்றில் மற்றொரு 1977-ல் எம்.ஜி.ஆர் வெற்ற போல் உருவாக்குமா அல்லது 2006-ல் விஜயகாந்த் ஒரு இடத்தைப் பிடித்தது போல் உருவாக்குமா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.

அவர் வாங்கும் வாக்கு சதவீதம் என்பது தமிழகத்தில் நிலவும் இருமுனைப் போட்டியை உடைத்து, ஒரு முக்கோணப் போட்டியை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் ஆய்வாளர்கள் கணிப்புப்படி, விஜய் குறைந்தது 15% முதல் 20% வாக்குகளைப் பிரித்தால் மட்டுமே அவர் தமிழக அரசியலில் ஒரு கிங் அல்லது கிங் மேக்கராக மாற முடியும்.

முடிவுரை

சினிமா என்பது ஒரு என்ட்ரி கார்டு மட்டுமே. ஆனால், எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆர் போல மக்களின் இதயங்களில் ஆட்சியாக மாற வேண்டுமென்றால், வெறும் திரைப்புகழ் மட்டும் போதாது; அது ஓட்டாக மாற வேண்டும். விஜய், எம்.ஜி.ஆரின் சாதனையை முறியடிப்பாரா அல்லது விஜயகாந்த், கமல் போன்றவர்களின் சவால்களை எதிர்கொள்வாரா என்பதை 2026 தேர்தல் களம் தீர்மானிக்கும்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...