தமிழக அரசியல் சின்னா பின்னமாகி கொண்டிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் புதிதாக ஆட்சி அமைக்க, திமுக எதிர்க்கட்சியானது ஒரு கதை என்றால், அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தன் சொந்த தொகுதியில் தோல்வியை தழுவியது சோகக்கதையாக மாறியது. மற்றொரு பக்கம் அரசியல் வரலாற்றில் இல்லாத நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டிருக்கிறது. அதாவது சட்டமன்றத் தேர்தலில் அத்தாட்சி மூன்றாம் இடம் பெற்றுள்ளது. இதனால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஒரு தரப்பு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இப்படியாக நிலவரம் சென்று கொண்டிருக்கும் நிலையில் அதிமுகவில் பிளவு என்பது புதிதல்ல. இது எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் நிகழ்ந்தது. பின் கட்சி இணைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது நிலைமை அப்படி கிடையாது. இத்தகைய பிளவுகளுக்கு கட்சியில் உள்ளவர்களிடையே கருத்து வேறுபாடுகள், அதிருப்தி, தேர்தலில் தோல்விக்கான கோபம் காரணம் என சொல்லப்பட்டாலும் மற்றொரு புறம் புதிதாக ஒரு விஷயம் முன்வைக்கப்படுகிறது. அதாவது அதிமுக கட்சியின் சார்பில் லால்குடி தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ள லீமா ரோஸூம் ஒரு காரணம் என சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது.
லீமா ரோஸ் வரலாறு தெரியுமா?
ஏன் லீமா ரோஸ் காரணம் காட்டப்படுகிறார் என கேட்டால் அவரது கணவர் இந்தியாவின் லாட்டரி கிங் என அழைக்கப்பட்ட மார்ட்டினின் வரலாறை நாம் பார்க்க வேண்டும் . பலரும் இந்த பெயரை கேள்விப்பட்டிருக்கலாம். நம் முந்தைய தலைமுறை வரை நேரடியாகவே லாட்டரி மார்ட்டினால் பாதிக்கப்பட்டவர்களாக கூட இருக்கலாம்.
1988 ஆம் ஆண்டு மியான்மரில் தனது லாட்டரி தொழிலை தொடங்கிய மார்ட்டின் பின்னர் இந்தியாவிலும் தனது லாட்டரி பிசினஸை தமிழ்நாட்டின் கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு விரிவுப்படுத்தினார்.
இப்படியான நிலையில் கிட்டத்தட்ட 12 ஆண்டு காலம் மிகப்பெரிய அளவில் உச்சம் தொட்டார். தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல மாநிலங்களிலும் லாட்டரி பிசினஸ் கொடிகட்டி பறந்தது.
இதனால் மார்ட்டினுக்கு கோடி கோடியாக பணம் கொட்டியது. ஆனால் அதே லாட்டரி சீட்டு மூலம் லாபம் கிடைக்கும் என ஏகப்பட்ட குடும்பங்கள் நம்பி, அதில் சிக்கி மிகப்பெரிய பேரிழப்பை சந்தித்தது. இதனால் அனைத்து வகையான லாட்டரி சீட்டுகளுக்கும் 2003 ஆம் ஆண்டு அப்போதைய மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தடை விதித்தார். இது மார்ட்டினுக்கு பேரிடியாக அமைந்தது.
திமுகவுக்கு மிகவும் நெருக்கமானவர்
அதேசமயம் லாட்டரி மார்ட்டின் திமுகவுக்கு மிக நெருக்கமானவர். தேர்தல் பத்திரங்கள் வழியாக அக்கட்சிக்கு ரூபாய் 500 கோடி நன்கொடையாக வழங்கி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் அவரது தொழிலுக்கு ஜெயலலிதா போட்ட தடை இன்று வரை தொடர்கிறது. இந்த நிலையில் தான் லாட்டரி மார்ட்டினின் மனைவிதான் லீமா ரோஸ். இவரது மருமகன் தமிழக அரசின் அமைச்சராக உள்ள ஆதவ் அர்ஜுனா. இவரின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் லட்சிய ஜனநாயக கட்சி என்ற கட்சியை தொடங்கி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார்.
இதன் மூலம் இந்த தேர்தலில் மூன்று பேரும் சட்டமன்ற உறுப்பினர்களாக மாறியுள்ளனர். இது அனைவரிடத்திலும் ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்பட்டது. அதிமுகவில் இணைந்து ஒரு மாதத்தில் லீமா ரோஸ்க்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.லால்குடி தொகுதியில் பணம் தண்ணீராக செலவழிக்கப்பட்டது. லீமா ரோஸ் வெல்வார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஜெயித்து அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்தார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் பணக்கார வேட்பாளர் என்ற பெருமையை லீமாரோஸ் பெற்றிருக்கிறார். அதேபோல் புதுச்சேரியில் பணக்கார வேட்பாளர் என்ற பெருமை ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பெற்றார். ஆதவ் அர்ஜூனாவும் தனக்கும் பல கோடி சொத்து இருப்பதை தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார்.
லீமா ரோஸ் தான் பின்னணியா?
இப்படியான நிலையில் தங்களின் லாட்டரி தொழில் முடக்கப்பட்டது அதிமுக ஆட்சியில் என்பதால் அதற்கு பழிவாங்கும் எண்ணத்தில் தான் அக்கட்சியில் லீமா ரோஸ் சேர்ந்ததாக ஒரு தகவல் உலா வருகிறது. குறிப்பாக ஆதவ் அர்ஜுனா சொல்லித்தான் லீமாரோஸ் அதிமுகவில் இணைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லட்சிய ஜனநாயக கட்சியில் நீண்ட காலம் பயணித்த அவர் அதிமுகவில் இணைந்தவுடன் சீட் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட தொகை கட்சிக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது பிளவு பட்டிருக்கும் அதிமுகவில் லீமாரோஸ் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இந்த தரப்புக்கு தேவையான பொருளாதார உதவியையும் செய்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் விஜய் எஸ்.பி.வேலுமணி தரப்பை சந்தித்தபோது அவரை வரவேற்ற லீமா ரோஸ், விஜய் கைகளில் தன் கண்களை வைத்து மரியாதையும் செய்தார். பொதுவெளியில் விஜய்யை பாராட்டியது என அனைத்தும் பெரும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது. ஆக மொத்தத்தில், லீமாரோஸ் தான் உண்மையில் அதிமுகவின் லேடி துரந்தரா என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
