இந்தியாவின் எரிசக்தி தேவையில் பெரும் பங்கினை வகித்து வந்த ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி, கடந்த ஜனவரி மாதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிவைச் சந்தித்துள்ளது. அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் காரணமாக, ரஷ்யாவிடமிருந்து வாங்கும் எண்ணெயின் அளவை இந்தியா கணிசமாகக் குறைத்துள்ளது. கடந்த 2022 மே மாதத்திற்குப் பிறகு முதல்முறையாக, இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 20 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது. ஜனவரி 2026 புள்ளிவிவரங்களின்படி, ரஷ்யாவிடமிருந்து வெறும் 1.98 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 44 மாதங்களில் காணப்படாத மிகக் குறைந்த அளவாகும்.
ரஷ்யாவைக் கைவிட்ட இந்தியா, தனது தேவையைப் பூர்த்தி செய்ய அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளை அதிகம் நாடத் தொடங்கியது. இதன் விளைவாக, சவுதி அரேபியாவின் பங்கு 17.5 சதவீதமாகவும், ஈராக்கின் பங்கு 16.6 சதவீதமாகவும் உயர்ந்தது. குறிப்பாக சவுதி மற்றும் குவைத் நாடுகளிடமிருந்து இந்தியா வாங்கும் எண்ணெயின் அளவு கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியது. ஆனால், தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே வெடித்துள்ள போரினால் இந்த வியூகம் சிக்கலில் சிக்கியுள்ளது. ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால், வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரவேண்டிய எண்ணெய் விநியோகம் முற்றிலுமாகத் தடைபடும் அபாயம் உருவாகியுள்ளது.
விண்ணைத் தொடும் கச்சா எண்ணெய் விலை
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 28 முதல் தொடங்கியுள்ள இந்த மோதல்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மார்ச் 2-ஆம் தேதி நிலவரப்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 80 டாலர் என்ற நிலையை எட்டியுள்ளது. வளைகுடா நாடுகளிலிருந்து விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் இந்தியப் பொருளாதாரம் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது.
