பங்குச்சந்தையில் வெற்றி பெறுவது என்பது எண்களைக் கையாள்வது மட்டுமல்ல, அது வணிகத்தின் உண்மையான மதிப்பை உணர்வதாகும். ஒரு நிறுவனத்தின் சந்தை விலைக்கும் (Market Price), அதன் உள்ளார்ந்த மதிப்பிற்கும் (Intrinsic Value) உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வதே செல்வத்தை உருவாக்குவதற்கான திறவுகோல்.
உண்மையான மதிப்பும் சந்தை விலையும்
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இரண்டு எண்கள் உண்டு. ஒன்று, உங்கள் அலைபேசி திரையில் மின்னும் சந்தை விலை. இது மக்களின் உணர்ச்சிகளால், பயத்தால் அல்லது ஆசையாலானது. இரண்டாவது, மறைந்திருக்கும் உள்ளார்ந்த மதிப்பு. இது அந்த வணிகத்தின் எதார்த்த நிலை. ஒரு கூட்டத்தின் மனநிலையைத் தவிர்த்துவிட்டு, வணிகத்தின் எதார்த்தத்தைக் கவனிப்பவரே புத்திசாலி. ஒரு கூட்டமே பயத்தில் இருக்கும்போது, ஒரு தங்க நாணயத்தை வெள்ளி நாணயத்தின் விலைக்கு விற்க முன்வருவார்கள். அந்தத் தருணத்திற்காகவே நீங்கள் காத்திருக்க வேண்டும்.
பண இயந்திரம் எனும் கோட்பாடு
உள்ளார்ந்த மதிப்பு என்பதைப் புரிந்துகொள்ள ஒரு எளிய உதாரணம்: உங்கள் அறையில் ஒரு இயந்திரம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அது ஆண்டுக்கு ஒருமுறை 100 ரூபாய் வழங்கும். அடுத்த 20 ஆண்டுகளுக்கு இது தொடரும். மொத்தம் 2000 ரூபாய் கிடைக்கப்போகிறது என்பதற்காக, இன்றே அந்த இயந்திரத்திற்கு 2000 ரூபாய் கொடுப்பீர்களா? நிச்சயம் மாட்டீர்கள். ஏனெனில், அந்தப் பணத்தைப் பெற நீங்கள் 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். லாபத்தைக் கணக்கிட்டு ஒரு 1000 ரூபாய் கொடுத்தால் அது புத்திசாலித்தனம்.
பங்குகளும் அப்படித்தான். ஒரு நிறுவனம் அதன் வாழ்நாளில் ஈட்டப்போகும் மொத்த லாபத்தை, இன்றைய மதிப்பில் கணக்கிடுவதே உள்ளார்ந்த மதிப்பு. நீங்கள் ஒரு பங்கை வாங்கும்போது, ஒரு பண இயந்திரத்தை வாங்குகிறீர்கள்.
அதன் மதிப்பு உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் என்ன விலை கொடுக்கத் தயாராக இருக்கிறார் என்பதில் இல்லை; அந்த இயந்திரம் எவ்வளவு "எரிபொருளை" (பணத்தை) உற்பத்தி செய்யும் என்பதில்தான் இருக்கிறது.
விலைக்கும் மதிப்பிற்கும் உள்ள இடைவெளி
பங்குச்சந்தையில் விலையும் மதிப்பும் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை. மக்கள் உற்சாகமாக இருக்கும்போது விலை மதிப்பிற்கு மேல் பறக்கும்; மக்கள் பயப்படும்போது விலை மதிப்பிற்குக் கீழே வீழும். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு, அதன் உரிமையாளர் அவசரமாகப் பணம் தேவைப்பட்டு பதற்றத்தில் இருக்கும்போது 60 லட்சத்திற்கு விற்கப்படலாம். வீட்டின் தரம் மாறவில்லை, ஆனால் அதன் விலை குறைந்துள்ளது. இந்த 40 லட்சம் ரூபாய் வித்தியாசத்தைத்தான் "பாதுகாப்பு வரம்பு" (Margin of Safety) என்கிறோம். இந்த இடைவெளி எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு உங்கள் முதலீடு பாதுகாப்பானது. எதிர்காலக் கணிப்பில் எச்சரிக்கை தேவை
ஒரு நிறுவனம் எதிர்காலத்தில் எவ்வளவு லாபம் ஈட்டும் என்பதை யாராலும் துல்லியமாகச் சொல்ல முடியாது. எனவே, ஒரு புத்திசாலித்தனமான முதலீட்டாளர் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு நிறுவனம் 20% வளர்ச்சி அடையும் என நீங்கள் நினைத்தால், கணக்குப் போடும்போது 10% மட்டுமே வளர்ச்சி அடையும் எனக் கருதி கணக்கிடுங்கள். நீங்கள் மிகவும் நம்பிக்கையுடன் அதிக விலை கொடுத்து வாங்கினால், நிறுவனம் நன்றாகச் செயல்பட்டாலும் உங்களுக்கு லாபம் கிடைக்காமல் போகலாம். ஆனால், நீங்கள் குறைவாகக் கணக்கிட்டும் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டால், அது உங்களுக்குக் கூடுதல் லாபத்தைத் தரும்.
புயலில் ஒரு நங்கூரம்
சந்தை வீழ்ச்சியடையும் போது பெரும்பாலானோர் நஷ்டமடையக் காரணம், அவர்களிடம் ஒரு நங்கூரம் (Anchor) இல்லாததுதான். பங்கின் மதிப்பு தெரியாததால், விலை குறையும்போது பயந்து விற்கிறார்கள். ஆனால், உள்ளார்ந்த மதிப்பை அறிந்த முதலீட்டாளர், சந்தை வீழ்ச்சியைக் கண்டு உற்சாகமடைவார். விலை குறைந்திருப்பதை அவர் ஒரு தள்ளுபடி வாய்ப்பாகப் பார்ப்பார்.
குறுகிய காலத்தில் சந்தை என்பது மக்களின் உணர்ச்சிகளால் இயங்கும் ஒரு வாக்கு இயந்திரம் (Voting Machine). ஆனால் நீண்ட காலத்தில், அது வணிகத்தின் உண்மையான லாபத்தை அளவிடும் ஒரு தராசு (Weighing Machine). மற்றவர்கள் ஓட்டுப் போடுவதில் பிசியாக இருக்கும்போது, நீங்கள் அதன் எடையைக் கவனிக்க வேண்டும்.
-C.R அருண், புகழ்பெற்ற முதலீட்டாளர்
