அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிரடியான உலகளாவிய இறக்குமதி வரித் திட்டங்களுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடித் தடை விதித்துள்ளது. பிப்ரவரி 20 அன்று வெளியான இந்தத் தீர்ப்பு டிரம்பிற்குப் பின்னடைவாகக் கருதப்பட்டாலும், அவர் தனது வழக்கமான பாணியில் மண்டியிட மறுத்து, அடுத்த சில மணி நேரங்களிலேயே புதிய வரி அறிவிப்புகளை வெளியிட்டு உலக நாடுகளை அதிர வைத்துள்ளார்.
நீதிமன்றத்தின் முடிவு: டிரம்பின் ஆவேசமான பதிலடி
தமது விரிவான வர்த்தகக் கொள்கைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை "ஆழ்ந்த ஏமாற்றம்" என வர்ணித்துள்ள டிரம்ப், இது அவசரகால அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தும் செயல் என நீதிபதிகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். தமக்கு எதிராகத் தீர்ப்பளித்த நீதிபதிகள் குறித்து "வெட்கப்படுவதாக"த் தெரிவித்த அவர், அதே வேளையில் தனக்கு ஆதரவாக நின்ற நீதிபதிகள் தாமஸ், அலிட்டோ மற்றும் கவனாக் ஆகியோரின் தேசப்பற்றையும் ஞானத்தையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்த நீதிமன்ற முடிவால் அமெரிக்காவைச் சுரண்டும் வெளிநாடுகள் தெருக்களில் இறங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடுவதாகவும், ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
புதிய ஆயுதம்: 10 சதவீத உலகளாவிய கட்டணம்
நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டாலும், அமெரிக்காவின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யத் தன்னிடம் இன்னும் வலிமையான சட்ட அதிகாரங்கள் இருப்பதாக டிரம்ப் சூளுரைத்துள்ளார். அதன்படி, ஏற்கனவே அமலில் இருக்கும் வழக்கமான வரிகளுடன் கூடுதலாக, 10 சதவீத உலகளாவிய புதிய இறக்குமதி வரியை (Global Tariff) விதிக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார். குறிப்பாக, பிரிவு 232-ன் கீழ் உள்ள தேசியப் பாதுகாப்பு வரிகளும், பிரிவு 301-ன் கீழ் உள்ள வரிகளும் எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் என்றும், அதோடு சேர்த்துப் பிரிவு 122-ன் கீழ் இந்தப் புதிய 10 சதவீத வரி உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசியப் பாதுகாப்பும் பொருளாதார மீட்சியும்
தனது முந்தைய வர்த்தகக் கொள்கைகள் மூலம் கடந்த ஓராண்டில் அமெரிக்காவை மீண்டும் வலிமையான நாடாக மாற்றியுள்ளதாகக் குறிப்பிட்ட டிரம்ப், தான் கையாண்ட வரி முறைகளே எட்டுப் போர்களில் ஐந்தை முடிவுக்குக் கொண்டுவர உதவியாக இருந்தன என்ற ரகசியத்தை உடைத்துள்ளார். நீதிமன்றத்தாலும் காங்கிரஸாலும் அங்கீகரிக்கப்பட்ட மற்ற அதிகாரங்கள் தன்னிடம் உள்ளதால், ஐஇஇபிஏ (IEEPA) வரிகளை விடவும் சக்திவாய்ந்த முறைகளைத் தான் கையில் எடுக்கப்போவதாக அவர் உறுதியளித்துள்ளார். வெளிநாட்டு நலன்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், அமெரிக்காவின் பாதுகாப்பிற்காக எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளத் தயார் என்பதே டிரம்பின் இந்த அதிரடி மாற்றத்தின் பின்னணியாகப் பார்க்கப்படுகிறது.
