இந்தியாவில் தினசரி ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை கோடிக்கணக்கில் உள்ளது. நமது இந்திய ரயில்வே பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பாசஞ்சர் ரயில் தொடங்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வரை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் வந்தே பாரத், ராஜ்தானி, தேஜஸ் என பலவகையான ரயில்கள் மக்களின் தேவைக்கு இயக்கப்பட்டு வருகின்றது. நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை இணைப்பதாலும், மிகக் குறைந்த கட்டணம், பாதுகாப்பான பயணம், சரியான நேர கடைப்பிடிப்பு போன்றவை இருப்பதாலும் மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர்.
ரயில் பயணத்தில் ஏற்படும் சிரமங்கள்
ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் 60 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது. அதே சமயம் ரயில் தண்டவாளங்களில் அவ்வப்போது பராமரிப்பு பணி, இணைப்பு பெட்டிகள் வருவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் ரயில் புறப்படுவது அல்லது போய் சேர்வது தாமதப்படுவது, சிக்னல் கோளாறு என பல வகையான நிகழ்வுகள் நடைபெறுகிறது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள்.
இதில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்றால் அந்தப் பாதையில் செல்லும் சில ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படும் அல்லது மாற்று பாதையில் திருப்பி விடப்படும். பகுதியாக ரத்து சென்றால் ரயில் சென்று சேர வேண்டிய ஸ்டேஷனுக்கு செல்லாமல் இடைப்பட்ட ஒரு ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படும். இத்தகைய பயணத்தில் முன்பதிவு செய்து செல்பவர்கள் சிரமத்தை அனுபவித்தாலும் தங்களுக்கு சேர வேண்டிய டிக்கெட் கட்டணத்தின் ஒரு பகுதியை திரும்ப பெறலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
அந்த வகையில் இந்த தொகுப்பில் பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்களில் கட்டணத்தை எப்படி திரும்ப பெறலாம் என்பது பற்றி காணலாம்.
டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறுவது எப்படி?
உதாரணமாக திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் வரை நீங்கள் முன்பதிவு செய்திருக்கலாம். அந்த ரயில் சில காரணங்களால் கடைசி நேரத்தில் செங்கல்பட்டு அல்லது தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்பட்டிருக்கலாம். அந்த ரயிலில் நீங்கள் பயணம் செய்திருந்தாலும் செங்கல்பட்டு - சென்னை எழும்பூர், தாம்பரம் - சென்னை எழும்பூர் வரையிலான கட்டணத்தை திரும்ப பெறலாம். அது ரூ.10 ஆக இருந்தாலும் திருப்பி அளிக்கப்படும்.
அதேபோல் ஏசி வகுப்பில் பயணம் செய்யும்போது அங்கு ஏசி பழுதடைந்திருந்தாலும் அதற்காக புகார் பதிவு செய்து குறிப்பிட்ட அளவு டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்.
அதேசமயம் ரயில் உங்கள் ரயில் நிலையத்திற்கு 3 மணி நேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வருகிறது. நீங்கள் அதில் பயணிக்கவில்லை என முடிவு செய்து விட்டால் ரயில் உங்கள் ரயில் நிலையம் வரும்முன் டிக்கெட்டை கேன்சல் செய்தால் முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.
புகார் பதிவு செய்வது எப்படி?
IRCTC செயலியினுள் நுழைந்து அங்கிருக்கும் File TDR என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் டிக்கெட் PNR எண்ணை பதிவு செய்து கொடுக்கப்பட்டிருக்கும் காரணங்களில் சரியானதை தேர்வு செய்ய வேண்டும். இப்போது உங்களின் புகார் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதனை நீங்கள் பயணம் மேற்கொண்ட 20 மணி நேரத்தில் இருந்து 72 மணி நேரத்திற்குள் செய்யவும். ஒவ்வொரு புகாருக்கும் குறிப்பிட்ட காலக்கெடு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இனியும் பணத்தை இழக்காதீர்கள்.
