நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) கிளைகளில் தொடர்ந்து 4 நாட்கள் சேவைகள் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. வங்கி ஊழியர்கள் மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளதால், வாடிக்கையாளர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடலாம்.
மேலும், மே 23 (சனி) மற்றும் 24 (ஞாயிறு) ஆகிய தினங்கள் வார இறுதி விடுமுறையாக இருப்பதால், தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கி கிளைகள் மூடப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரொக்க பரிவர்த்தனை, காசோலை பரிமாற்றம் உள்ளிட்ட கிளை சார்ந்த சேவைகள் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வேலைநிறுத்தத்திற்கு அகில இந்திய "ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா" சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. ஊழியர் பற்றாக்குறை, ஆட்சேர்ப்பு தாமதம், சேவை நிபந்தனைகள் உள்ளிட்ட நீண்டகால பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தொழிற்சங்கம் மொத்தம் 16 கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அவற்றில் முக்கியமானவையாக துணை பணியாளர்களின் ஆட்சேர்ப்பை அதிகரித்தல், பாதுகாப்பு பணியாளர்களின் நிலையை மேம்படுத்துதல், ஊதிய ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்தல், ஊழியர்களுக்கு சிறந்த மருத்துவ பலன்கள் வழங்குதல், ஓய்வூதிய திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வருதல் ஆகியவை அடங்கும்.
மேலும், தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) அதிக நெகிழ்வுத்தன்மை மற்றும் மேம்பட்ட பலன்களை வழங்க வேண்டும் என்றும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த வேலைநிறுத்தம் நடைபெறுமானால், வங்கி கிளைகளில் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்படலாம். இருப்பினும், இணைய வங்கி, மொபைல் வங்கி போன்ற டிஜிட்டல் சேவைகள் வழக்கம்போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பரிவர்த்தனைகளின் பின்தள செயலாக்கம் மெதுவாக இருப்பதால், சில சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும்.
இதையடுத்து, வாடிக்கையாளர்கள் தங்களது அவசர வங்கி பணிகளை முன்கூட்டியே முடித்து கொள்ளுமாறு வங்கி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
