இந்திய குடிமக்களின் மிக முக்கியமான நிதி ஆவணமாகத் திகழும் பான் கார்டு பயன்பாட்டில், மத்திய அரசு மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளது. வருமான வரிச் சட்டம் 2025-ன் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட 'வருமான வரி விதிகள் 2026'-க்கான வரைவு ஆவணத்தை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த புதிய மாற்றங்கள் அமலுக்கு வரும்போது, சாமானிய மக்கள், சிறு குறு வியாபாரிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் சொத்து வாங்குதலில் பெரும் நிவாரணத்தைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணப் பரிவர்த்தனை உச்சவரம்பில் தளர்வு!
தற்போதைய நடைமுறைப்படி, ஒரு நாளில் 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தாலே பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிய வரைவு விதிகளின்படி, ஒரு நிதியாண்டில் வங்கி அல்லது தபால் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் மொத்த டெபாசிட் அல்லது பணம் எடுத்தல் தொகை 10 லட்சம் ரூபாயைத் தாண்டினால் மட்டுமே பான் விவரங்களைக் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால் தினசரி சிறு வணிகத்தில் ஈடுபடும் வியாபாரிகள் மற்றும் ஊழியர்களுக்குப் பான் கார்டு தொடர்பான நெருக்கடிகள் குறையும்.
வாகனம் மற்றும் சொத்து வாங்குவோருக்குப் புதிய நிபந்தனைகள்!
வாகனங்கள் வாங்குவதற்கான பான் கார்டு வரம்பிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இனி 5 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள வாகனங்களை வாங்கும்போது பான் விவரங்களைக் கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இதற்கு முன் இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த விலக்கு தற்போது நீக்கப்பட்டு, அவையும் இந்த வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல், அசையா சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் பான் கார்டு காட்ட வேண்டிய கட்டாய வரம்பு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் நிதி நடைமுறைகளை எளிமையாக்குவதை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
