வணிகச் சிலிண்டர் விலை உயர்வு
நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டிற்கான எல்.பி.ஜி சிலிண்டர் விலை ₹203 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு சிலிண்டரின் விலை ₹2,246 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது உணவகங்கள் மற்றும் சிறு வணிகர்களைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனையில் புதிய பாதுகாப்பு
ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மோசடிகளைத் தடுக்கும் வகையில் புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இனி ஒவ்வொரு முறை பணப் பரிமாற்றம் செய்யும்போதும் ஒருமுறை கடவுச்சொல் (OTP), கைரேகை அல்லது முக அங்கீகாரம் (Face ID) போன்ற இரண்டு நிலை பாதுகாப்புச் சோதனைகள் (Two-step verification) கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இவை வெற்றிகரமாக முடிந்த பின்னரே பரிவர்த்தனை முழுமையடையும்.
தமிழகச் சுங்கச்சாவடி கட்டண உயர்வு
தமிழகத்தில் உள்ள 68 சுங்கச்சாவடிகளில் ₹10 முதல் ₹200 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சுங்கக் கட்டணத்தைச் ரொக்கமாகச் செலுத்தும் முறை முழுமையாக நீக்கப்பட்டு, ஆன்லைன் (FASTag) வழியாக மட்டுமே செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சரக்கு போக்குவரத்துச் செலவு அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
எரிபொருள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள்
கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்த 20% உத்தரவாதக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக பெட்ரோல் மற்றும் டீசல் விநியோக முறைகளில் சில மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.
சீன சிசிடிவி கேமராக்களுக்குத் தடை
பாதுகாப்பு மற்றும் தரக் காரணங்களுக்காகச் சீனாவில் தயாரிக்கப்பட்ட சிசிடிவி (CCTV) கேமராக்களின் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிக்கவும் தரத்தை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தங்கக் கடன் மற்றும் பான் கார்டு விதிகள்
தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சம் 75% வரை மட்டுமே கடன் பெற முடியும் எனப் புதிய வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது (குறிப்பாக ₹2.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு). அதேபோல், புதிய பான் (PAN) கார்டு பெற விண்ணப்பிக்கும்போது பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிப்பது இனி கட்டாயமாகும்.
விமான டிக்கெட் விலை உயர வாய்ப்பு
விமான எரிபொருள் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான எரிபொருள் 1,000 லிட்டருக்கு ₹96,638-லிருந்து ₹2.07 லட்சமாகவும், சர்வதேச எரிபொருள் ₹76,435-லிருந்து ₹9.58 லட்சமாகவும் உயர்ந்துள்ளது. இதனால் விமானக் கட்டணங்கள் பெருமளவு உயரக்கூடும்.
ரயில் டிக்கெட் ரத்து விதியில் மாற்றம்
ரயில்வே நிர்வாகம் ரத்து செய்யும் விதியை மாற்றியுள்ளது. இனி ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்யாவிட்டால், செலுத்திய பணம் திரும்ப வழங்கப்படமாட்டாது (No Refund).
வருமான வரி முறையில் புரட்சி
வருமான வரித் துறையில் ‘நிதியாண்டு’ மற்றும் ‘மதிப்பீட்டு ஆண்டு’ என்ற இரட்டை முறைகள் நீக்கப்பட்டு, ‘வரி ஆண்டு’ (Tax Year) என்ற ஒற்றை முறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
