இந்தியாவில் 2026-2027 நிதியாண்டு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதையொட்டி, மத்திய அரசு வருமான வரி மற்றும் முதலீடுகள் தொடர்பான விதிகளில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, 1961-ஆம் ஆண்டின் பழைய வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, 2025-இல் உருவாக்கப்பட்ட புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது. இது பொதுமக்களின் சேமிப்பு மற்றும் வரி தாக்கல் செய்யும் முறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
1. புதிய வருமான வரிச் சட்டம் அமல்
சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, மத்திய அரசு கொண்டு வந்த புதிய வருமான வரிச் சட்டம் (New Income Tax Act) ஏப்ரல் 1, 2026 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது. இது வரி விதிப்பு முறையை எளிமையாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. வரி தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு
சுயதொழில் செய்பவர்கள் மற்றும் வணிகம் செய்பவர்கள் தாக்கல் செய்யும் ITR-3 மற்றும் ITR-4 படிவங்களுக்கான காலக்கெடு மாற்றப்பட்டுள்ளது. வழக்கமாக ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடையும் இந்த அவகாசம், இனி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
3. திருத்தப்பட்ட வரி தாக்கல் (Revised ITR) கால அவகாசம்
ஏற்கனவே தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் ஏதேனும் பிழைகள் இருந்தால், அதைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31-லிருந்து மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், டிசம்பர் 31-க்குப் பிறகு திருத்தம் செய்பவர்கள் அதற்கெனக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
4. விற்பனை வரி (TCS) மாற்றங்கள்
பல்வேறு பொருட்களுக்கான டிசிஎஸ் (TCS) வரி விகிதம் 2 சதவீதமாகச் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுபானம், ஸ்கிராப் மற்றும் கனிமங்கள் விற்பனைக்கான வரி 2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம், பீடி இலைகளுக்கான வரி 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
5. பங்குச் சந்தை வரி (STT) உயர்வு
பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்பவர்களுக்கு வரிச் சுமை சற்று கூடியுள்ளது. பியூச்சர் வர்த்தகத்திற்கான எஸ்டிடி (STT) வரி 0.05 சதவீதமாகவும், ஆப்ஷன் பிரீமியத்திற்கான வரி 0.15 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறுகிய கால வர்த்தகர்களைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6. பங்குகள் திரும்பப் பெறுதல் (Buyback) வரி நிவாரணம்
பங்குகளைத் திரும்பப் பெறும் போது (Buyback) விதிக்கப்படும் வரி முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி இது மூலதன ஆதாய வரியாக (Capital Gains Tax) கருதப்படும். அதாவது, நீங்கள் பங்குகளை வாங்கிய விலைக்கும், விற்ற விலைக்கும் இடைப்பட்ட 'லாபத்திற்கு' மட்டுமே வரி விதிப்பு இருக்கும். இது சிறு முதலீட்டாளர்களுக்குப் பெரிய நிம்மதியைத் தரும்.
7. டிவிடெண்ட் வட்டிச் சலுகை ரத்து
பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யக் கடன் வாங்கி, அதற்குக் கட்டும் வட்டியை டிவிடெண்ட் வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளும் சலுகை இதுவரை இருந்தது. ஆனால், ஏப்ரல் 1 முதல் இந்தச் சலுகை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. இனி டிவிடெண்ட் வருமானத்திற்கு முழுமையாக வரி செலுத்த வேண்டும்.
