மத்திய அரசின் புதிய வருமான வரிச் சட்டத்தின் கீழ், வரித் தாக்கல் முறையில் புரட்சிகரமான மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இதுவரை நடைமுறையில் இருந்த பல வரிப் படிவங்களின் பெயர்கள் மாற்றப்பட உள்ளன. வரி அடுக்குகளில் பெரிய மாற்றங்கள் இல்லாவிட்டாலும், சம்பளதாரர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
‘வரி ஆண்டு’ (Tax Year) அறிமுகம்
இதுவரை வழக்கத்தில் இருந்த ‘நிதியாண்டு’ (Financial Year) மற்றும் ‘மதிப்பீட்டு ஆண்டு’ (Assessment Year) என்ற இரு வேறு பிரிவுகளுக்குப் பதிலாக, இனி ‘வரி ஆண்டு’ என்ற ஒரே பொதுவான நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வரி கணக்கீட்டில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்த்து, நடைமுறையை எளிமையாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரித் தாக்கல் காலக்கெடு
- ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-2: ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஐடிஆர்-3 மற்றும் ஐடிஆர்-4 (வணிகம்/தொழில்): ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- தணிக்கை செய்யப்பட்ட நிறுவனங்கள்: அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
சம்பளதாரர்களுக்கான அதிரடிச் சலுகைகள்
புதிய வரி முறையின் கீழ், ஆண்டு வருமானம் ₹12 லட்சம் வரை பெறுபவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை. அத்துடன், நிலையான கழிவு (Standard Deduction) ₹75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், மொத்தம் ₹12.75 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் முழுமையான வரிவிலக்குப் பெற முடியும். மேலும், மெட்ரோ நகரங்களில் வசிப்போர் தங்களது சம்பளத்தில் 50% வரையிலும், பிற நகரங்களில் வசிப்போர் 40% வரையிலும் வீட்டு வாடகை படி (HRA) மூலம் வரிவிலக்குப் பெறலாம்.
பான் கார்டு (PAN) கட்டாயம்
- ஆண்டுக்கு ₹1 லட்சத்திற்கும் அதிகமாக வீட்டு வாடகை செலுத்தினால், வீட்டு உரிமையாளரின் பான் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- வங்கி கணக்குகளில் ஓராண்டில் ₹10 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தாலோ அல்லது பணம் எடுத்தாலோ பான் கார்டு கட்டாயம்.
- ஹோட்டல், உணவகம் அல்லது சுப நிகழ்ச்சிகளுக்காக ₹1 லட்சத்திற்கு மேல் செலவு செய்தாலும் பான் விவரங்கள் அளிக்கப்பட வேண்டும்.
கல்வி மற்றும் இதர சலுகைகள்
குழந்தைகளின் கல்விக்காக ஒரு குழந்தைக்கு மாதம் ₹3,000 வீதம், அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு வரிவிலக்கு உண்டு. புதிய வரி முறையைத் தேர்ந்தெடுப்பவர்கள் உணவு வவுச்சர்கள் மூலம் மாதத்திற்கு ₹4,400 முதல் ₹8,800 வரை வரிச் சலுகை பெறலாம்.
பரிசுகள் மற்றும் திருத்தப்பட்ட தாக்கல்
ஒரு வரி ஆண்டில் ₹15,000-க்கும் மேல் பெறப்படும் பரிசுகள் அல்லது வவுச்சர்களுக்கு வரி விதிக்கப்படும். மேலும், வரி ஆண்டு முடிவடைந்த 12 மாதங்களுக்குள் திருத்தப்பட்ட வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்யும் கூடுதல் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் வரி நடைமுறையை எளிமைப்படுத்துவதுடன், நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் நிம்மதியைத் தரும் என நிதி நிபுணர்கள் கருதுகின்றனர்.
