மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலைச் சமாளிக்கப் பொதுமக்கள் மாற்று வழிமுறைகளைத் தேடத் தொடங்கியுள்ளதால், ஆன்லைன் வர்த்தகத் தளங்களில் மின்சார அடுப்புகளின் (இன்டக்சன் ஸ்டவ்) விற்பனை முன் எப்போதும் இல்லாத வகையில் வரலாறு காணாத வளர்ச்சியை எட்டியுள்ளது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் புள்ளி விவரங்களின்படி, கடந்த சில நாட்களில் மட்டும் மின் அடுப்புகளின் விற்பனை மூன்று மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது. குறிப்பாக டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இதற்கான தேவை மிக அதிகமாக உள்ளது. அமேசான் தளத்தில் கடந்த ஒரு நாளில் மட்டும் விற்பனை 20 மடங்கு உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் உள்ள சிக்கல் மற்றும் அதன் விலை உயர்வு காரணமாகவே மக்கள் மின்சார அடுப்புகளைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். முன்பு வாரத்திற்குச் சில அடுப்புகள் மட்டுமே விற்பனையான நிலையில், தற்போது ஒரே நாளில் ஏராளமானோர் மின் அடுப்புகளை வாங்கிச் செல்கின்றனர். வீடுகள் மட்டுமின்றி உணவக உரிமையாளர்களும் தற்போது பெரிய அளவிலான மின்சார அடுப்புகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதே நிலை நீடித்தால் வரும் நாட்களில் மின்சார அடுப்புகளுக்கும் சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக வர்த்தகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
