மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச வான்வெளியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல்வேறு முன்னணி விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரத்து செய்துள்ளன. பல விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்தத் திடீர் மாற்றங்களால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் நூற்றுக்கணக்கான இந்தியப் பயணிகள் வெளிநாட்டு விமான நிலையங்களிலேயே பல நாட்களாகச் சிக்கித் தவித்து வருகின்றனர். அடிப்படைத் தேவைகள் மற்றும் மருத்துவ அவசரநிலைகள் குறித்த அச்சம் பயணிகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயணக் காப்பீடு மற்றும் இழப்பீடு விதிகள்
இக்கட்டான சூழலில் சிக்கியுள்ள பயணிகள், தாங்கள் எடுத்த பயணக் காப்பீடு (Travel Insurance) தங்களுக்கு நிதி ரீதியாக உதவுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். பொதுவாக, ஒரு பகுதியில் போர் அல்லது கலவரம் தொடங்குவதற்கு முன்பே காப்பீடு எடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே அதன் பலன்களைப் பெற முடியும். வான்வெளி மூடப்படுவதால் ஏற்படும் 'பயணத் தாமதம்' அல்லது 'விமான இணைப்பு துண்டிப்பு' போன்ற காரணங்களுக்காகக் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வாய்ப்புள்ளது. ஆனால், ஒரு நாடு அதிகாரப்பூர்வமாகப் போரை அறிவித்துவிட்டால், 'போர் விலக்கு விதி' (War Exclusion Clause) நடைமுறைக்கு வரும். இந்த விதியின் கீழ், போர் நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்குக் காப்பீட்டு நிறுவனங்கள் பொறுப்பேற்காது.
மருத்துவக் காப்பீட்டின் முக்கியத்துவம்
நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருப்பது பயணிகளின் உடல் மற்றும் மன நலத்தைப் பாதிக்கக்கூடும். இத்தகைய சூழலில், போர் நடவடிக்கைகளோடு நேரடித் தொடர்பில்லாத உடல்நலக் குறைவு அல்லது விபத்துகளுக்கு மருத்துவக் காப்பீடு மூலம் சிகிச்சை பெற முடியும். மருத்துவமனையில் அனுமதித்தல் மற்றும் அவசர சிகிச்சைக்கான செலவுகளைக் காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்கும். இருப்பினும், ராணுவத் தாக்குதல்களால் நேரடியாகக் காயம் அடைந்தால், அந்த மருத்துவச் செலவுகளுக்குப் பெரும்பாலான பாலிசிகளில் பாதுகாப்பு இருக்காது என்பதைப் பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
